Unlucky 7 : முன்னாள் உறுப்பினர்களில் ஏழு பிரமுகர்கள் இம்முறை புத்தளம் நகர சபைத் தேர்தலில் தோல்வி..!! யாரெல்லாம் தோற்றார்கள்..?

· · 766 Views
புத்தளம் நகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் ஏழு பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளதுடன், மூவர் மீண்டும் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை நடைபெற்ற புத்தளம் நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டது. இவ்வாறு ஐ.தே.கவில் போட்டியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர்களான வை.எம்.நிஸ்தார் (முதலாம் வட்டாரம்), எஸ்.ஆர்.எம்.முஹ்சி (இரண்டாம் வட்டாரம்), ஏ.ஓ.அலிகான் (மூன்றாம் வட்டாரம்), அலிசப்ரி ரஹீம் (நான்காம் வட்டாரம்), உஜித்த ரத்னாயக்க (எட்டாம் வட்டாரம்) ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
அத்துடன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் புத்தளம் நகர சபைக்கு 5ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர் முஹம்மது அமீனும், பந்து சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் நகர சபை உறுப்பினர் முஹம்மது ரிஸ்வானும் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்ட முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் மற்றும் மூன்றாம் வட்டாரத்தில் போட்டியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக் ஆகியோர் மீண்டும் நகர சபைக்குத்  தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர் புஷ்ப குமாரவும் மீண்டும் சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, இந்த தேர்தலில் புத்தளம் நகர சபைக்கு எட்டு பேர் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் மு.கா சார்பில் ஐவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இருவரும், ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுன சார்பில் ஒருவரும் என தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட 11வட்டாரத்தில் மு.கா. முதலாம் வட்டாரம் முதல் ஏழாம் வட்டாரம் வரை அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.
எட்டாம், ஒன்பதாம் வட்டாரங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதுன், பத்தாம் மற்றும் பதினொராம் வட்டாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
புத்தளம் நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 11 வட்டாரத்திலும் முஸ்லிம் காங்கிரஸை விட கூடுதலான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் 10, 11 ஆகிய இரண்டு வட்டாரங்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : லங்கா ரோய்டேர்ஸ்

Leave a Reply

Your email address will not be published.