Special pinned post : ” யூசி யார்டுக்கு அருகில் உள்ள கிறிஸ்தவ மயானத்தை நகர சபைக்கு வழங்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவு..!! ஒரு Flash back story

· · 1219 Views

” ஆண்டி இங்கே

அரசனும் இங்கே

அறிஞன் இங்கே

அசடனும் இங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இதுதான்

நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே………………………………….”

இது  அந்த நாள் சினிமாப் பாடல். சீர்காழி   கோவிந்த ராஜனின் குரலில் ஒலித்த அமரத்துவம் பெற்ற தத்துவப் பாடல். மண் ஆசை, பொன்னாசை. பெண்ணாசைகளுக்கு அப்பால் போய் மனித உள்ளத்தைக் கனக்கச் செய்யும்  யதார்த்தத்தின் பிரதிபலிப்பு.

yard

புத்தளம்  நகர சபைக்கு புத்தளம்  மேல் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிதாகக் கிடைத்துள்ள  வேலைகள் முன்றலை (YARD) ஐப் பார்த்போது  இந்த வரிகள்தான் எனது மனத் திரையில் நிழலாடியது.

புத்தளம் நகர பிதாவாக  மர்ஹும் எம்.ஐ. பிஸ்ருல் ஹாபி அவர்கள் கடமையாற்றிய காலத்தில் நகர சபையின்  இரண்டாம் வட்டார (தில்லையடி பிரதேசம்)  உறுப்பினராக இருந்த  எஸ்.ஏ. சலீம் காண் சபையில் ஒரு பிரேரணை சமர்ப்பித்தார்.

yard-2

”நகர சபை வேலைகள் முன்றலுக்கு (YARD) அருகில் உள்ள பழைய  கத்தோலிக்க அடக்கஸ்தலம் காடு வளர்ந்து நகர மத்தியில் அவலட்சணக் கோலமாக காட்சியளிக்கிறது..  அது   துர்நடத்தைகளுக்கும்,  கழிவு வெளியேற்றத்துக்காகவும்  பாவிக்கப்படுகிறது.  எனவே அதை நகர சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அபிவிருத்தி செய்தால்  நகர சபைக்க வருமான மார்க்கமாக அமையும்”

அந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் ஹாபி அவர்களின் சபையில் அங்கம் வகித்தது ஏழு முஸ்லிம்கள், இரண்டு சிங்கள சமுகத்தவர்கள். ஒரு தமிழ் சமுகத்தினர்.  பிரேரணை சமரப்பிக்கப்பட்டபோது உறுப்பினர் எம்.பீ. மோசஸ்  முதலாவது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

” எமது மத விசுவாசப்படி இறந்தவர்கள் கல்ல‌றைகளில் வசிக்கிறார்கள். எனவே கல்லறைகளை உடைத்து அந்த மையவாடியை  வேறு தேவைக்காக உபயோகிக்க முடியாது.  அப்படிச் செய்வதானால் ”விக்கார் ஜெனரல்” இன் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் ”  இது நகர சபை உறப்பினர் மோசஸின்  வாதாட்டம்.

 ” இந்த மையவாடியின் பின்னால் இருப்பது அரசாங்க விவசாய திணைக்களம், இடது பக்கம் இருப்பது பொதுப் பாதை, வலது புறம் இருப்பது  நகர சபை வேலைகள் முன்றல். முன்னால் இருப்பது புத்தளம் – குருநாக்கல் பிரதான வீதி. இவற்றுக் கிடையில் எப்படி ஒரு துண்டு நிலம் ஒரு மதத்தவர்களின் உரிமையாக இருக்க முடியும். எனவே அந்த நிலத்தை நகர சபை சுவீகரிக்க வேண்டும். ”  இது அந்த நாள் நகர சபையின் பிரதித் தலைவர்  டப்ளிவ.எம். மென்டிஸ் அவர்களின் வாதாட்டம்.

ஆனால்  மோசஸ் அவர்களும்,  ஹாபி அவர்களும் சார்ந்த கட்சி அரசியல் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஹாபி மோசஸ் சார்பாக தீர்மானம் மேற் கொண்டார்.

வெள்ளைக்காரண் காலத்து  மையவாடிக்கு உரிமை ஆவணம் எதையும் கொண்டிராத விக்கார் ஜெனரலிடம் அங்கீகாரம் கேட்க வேண்டி ஏற்பட்டமை உண்மையிலேயே  வேதனைக்குரியது.

பெரும்பாண்மையை முஸ்லிம் சமுகத்து நகர நிருவாகம்  இந்த விடயத்தில்  ஏமாந்து போனது.  Church of Ceylon மதப் பிரிவினரின் விக்கார் ஜெனரலுக்கு அறிவிக்கபபட்டபோது  அவரச அவசரமாக  அந்த காணிக்கு  உறுதி ஒன்று தயாரிக்கப்பட்டது.  இதன் பிகாரம் ”ராதா” எனற பெண்மணி அந்தக் காணிக்கு உர‌ிமையாளராக வந்தார்.  சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த நிலை.

இந்த சம்பவத்தின் பின்னர் பல வருடகாலம் இந்த வெள்ளையர் காலத்து மையவாடி முன்னர் போலவே அவலட்சணக் கோலமாக  நகர மத்தில் கிடந்தது. இந்த  சம்பவத்தின் மூலம் நடந்தது மோசஸ் அவர்களின் கருத்தப்படி இறந்வர்கள் கல்லறைகளில் வாழும் பூமிக்கு  இறக்கப் போகின்றவர்கள்  மரபுரிமை கோரிய வேடிக்கைதான்.

அதன் பின்னர்  எங்கிருந்தோ முளைத்த இரு மதப் பிரிவினர் காணிக்கு உரிமை கோரி ஒருவர்  காணி‌யைத் துப்புரவு செய்து கொட்டில் அமைக்க , அதை இன்னுமொரு சாரார் உடைத்து விட்டு தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர தொடரான ஒரு மல்யுத்தம் நடந்த கொண்டிருந்தது.

மரணித்தவர்களின் பூமிக்கு மரபு வழி  உரிமை கொண்டாட வந்தோர் மத்தியிலே  ஏரிக் கரையோரம்  பூர்வீக உரிமை கோரி  காணிகளைப் பிடித்து விற்று  பலரையும் நடுத்தெருவின் கைவிட்ட  நபரும் அடங்குவார்.  வெள்ளை உடுப்பில் சதாவும் சீட்டுக் கட்டுக்களுடன்  நீதிமன்றச் சுற்றாடிலில் காணப்படுகின்ற இந்த நபரை நகரில் பலரும அறிவார்கள்.

உரிமைப் போராட்டம்  இரு சாராருக்கும் இடையிலான  கைகலப்பாக வெடித்ததால்   புத்தளம் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு  புத்தளம் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து  மேல் நீதி மன்றத்துக்குப் போனபோது  நீதி மன்றை திருப்தி படுத்தும் ஆதாரங்களை நிலப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமரப்பிக்கத் தவறியதால்  அந்தக் காணி புத்தளம் நகர சபைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என மேல் நிதி மன்றம் தீர்மானித்தது.

இந்த மேல் நீதிமன்ற தீர்மானத்தின் பிரகாரம் அந்த வெள்ளையர் காலத்து அடக்கஸ்தலம்  புத்தளம் நகர சபையின் வேலைகள் முன்றலுடன் இணைக்கப்பட்டு  விரிவாக்கப்பட்டுள்ளது.

இதை  தொடர்ந்து வரும் நகர நிருவாகங்கள்  பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ளுமா என்பதுதான் இப்போது தொக்கி நிற்கு கேள்வி.  ஏனெனில்  ஏற்கனவே உள்ள முன்றலில்  கடைகளை அமைப்பதற்காக தனியாருக்கு காணிகளை வழங்க நகர சபையின் இடைக்கால நிருவாகம் முன்பு தீர்மானித்ததால் அற்பத்துக்கும் சொற்பத்துக்கும்  காணிகளை வாங்கி கடைகளைக் கட்டி  அற்பமாகவும், சொற்பமாகவும் நகர சபைக்குக் கொடுத்துவிட்டு  தமது பைகளை நிரப்பிக் கொண்டு பலர்  வாழ்வது போல  இந்த  காணிக்கும் அப்படியொரு தலை விதி ஏற்படாது என்பதற்கு யார் உத்தரவாதம்…..?

அந்த நகர சபை முன்றலிலும் சரி, புதிதாக அமைக்கப்பட்டு வரும்  விளையாட்டரங்கின்  ஒரு பகுதியிலும் சரி ( இலங்கை வங்கிப் பக்கமாக)  கடைகளை அமைத்துக் கொள்ள தனியாருக்கு காணிகளை வழங்கியதன் மூலம் சபைக்கு ஏற்படுததப்பட்ட  நட்டத்துக்கு யார் யாருக்கு பதில் சொல்வது…..?

பன்னீர் செல்வம் 

 

Leave a Reply

Your email address will not be published.