Special news : அருவக்காட்டில் குப்பை கொட்டுவதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை..!!அடுத்த சில நாட்களில் வர்த்தமானி வெளியிட அரசாங்கம் நடவடிக்கை

· · 997 Views

By : Anas Abbas

 

 

 

 

‘கடந்த காலத்தில் நாட்டில் கழிவுகள் சேகரிக்கப்பட்ட சகல இடங்களிலும் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த திட்டத்தால் சுற்றாடலுக்கோ, புராதன இடங்களுக்கோ எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது. இது எதிர்காலத்துக்கான நிரந்தர தீர்வாக அமையும்.’

 

 

Image result for champika

 

 

-சம்பிக்க ரணவக்க-

Related image‘ஹோல்சிம் கம்பனி அநேகமான குழிகளை நிரப்பி வேம்பு மரங்களை நட்டியிருந்தது. தற்போது இவ்வாறு நட்டிய மரங்கள் கனிசமான அளவு வளர்ந்திருப்பதன் காரணமாக 10 வருடம் அல்லது அதற்கு மேலான கால எல்லைக்குள் நாளொன்றுக்கு 1200 மெட்ரிக் டொன் வீதம் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு பிரேரித்திருக்கும் இத்திட்டத்திற்கு போதிய ஆழமான குழிகள் இங்கு இல்லை’

 

 

-பாராளுமன்ற உறுப்பினர் நவவி-

‘தொம்பேயில் அமுல்படுத்தப்பட்ட திட்டத்திற்கமையவே இத்திட்டமும் அமுலாகவுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாவது எடுக்கும். ஒரு முறைப்படுத்தப்பட்ட அமைப்பிலேயே குப்பைகள் கொட்டப்படவுள்ளது. அதனால் பெரியளவிலான பாதிப்புக்கள் இல்லையென்றே கருதுகிறேன். மக்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் வழங்கப்படவில்லை என்பதே எதிர்ப்புக்களுக்கு காரணமாக உள்ளது.’

 

 

கிராமசேவகர் மின்ஹாஸ்- எலுவன்குளம் பிரிவு

பல வருடங்களாக புலிப்பிரச்சினைக்கு முகங்கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து சீமெந்து காபரேஷனின் பாதிப்புக்களுக்கு உட்பட்டு வருகின்றோம். அனல் மின்சார நிலையம் தாபிக்கப்பட்டமையினால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் கொழும்பில் வேலைக்கு சென்றுள்ளார்கள். சீமெந்து காபரேஷனுக்கான சுண்ணக்கல் அகழ்விற்கு டயனமைட் இட்டு கற்களை வெடிக்கச் செய்யும் போது சிறு கற்துண்டுகள் கலந்த தூசுப்படலம் எமது வீடுகளை மூடிக்கொள்ளும். வெடிப்பின் அதிர்வில் எமது வீடுகளிலும் வெடிப்பேட்டுள்ளது. தற்போது கொழும்பு குப்பைகளை இங்கு எமது குடியிறுப்புக்களுக்கு அண்டிய பகுதியில் கொட்டப்பார்க்கிறார்கள். முன்பு கரத்தீவு, சேரக்குளிய பகுதிகளுக்குச் சொந்தமான 350 படகுகள் காணப்பட்டன. தற்பொழுது 5 படகுகளாவது மீன்பிடிக்கச் செல்வதில்லை.

 

 

மெல்கம் ஜோசப்- சேரக்குளிய மீன்பிடிச் சங்கத் தலைவர்

வில்பத்து சரணாலயத்தை அண்டிய பகுதியில் குப்பைகளை போடுவதற்கே ஏலவே தீர்மானித்திருந்தார்கள். தற்பொழுது வில்பத்துவிற்கு 3 கிலோமீற்றர் முன்னே உள்ள அறுவைக்காட்டில் கொட்டுவதற்கு முடிவெடுத்துள்ளார்கள். மீருகங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதாக கூறுகிறார்கள். அறுவைக்காட்டைச் சூழவுள்ள நாம் மிருகங்களை விடக் கேவலமானவர்களா? என நான் கேற்கிறேன். பள்ளிகளில் மக்களது எதிர்ப்புக்களை எழுதுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் கச்சேரியில் கிராமசேவகர்களுக்கு நடாதப்பட்ட கூட்டத்தில் அறுவைக்காட்டில் குப்பை கொண்டுவருவதால் எவ்வாறான அபிவிருத்தி பணிகள் தேவைகள் என எழுதித் தருமாறு கேட்டுள்ளார்கள. நாம் எதிர்ப்பை எழுதத் தேவையில்லை. அபிவிருத்தியை எழுதிக்கொடுத்தாலேயே நாம் அதை அங்கீகரிக்கின்றோம் என்பது அர்த்தம்.

 

 

 

எச்.எச். நபீல்- கணித ஆசிரியர், கரத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம்.

மயோசின் கால சுண்ணக்கல் பாறையே உடைத்தெடுக்கப்படுகிறது. இது உருமாறிய பாறை. அடியில் உடைத்தெடுக்கப்படுவதனால் கரையும் தன்மையையும் ஊடுகடத்தக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. சுண்ணக்கல்லை உடைத்துவிட்டு அந்தக்குழியில் குப்பைகளை போட்டு மூடும் போது அதிலுள்ள நச்சு வாயுக்கள் ஊடுகடத்தப்பட்டு அதோடு உள்ள நிலப்பரப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இதற்கு கசித்துளி படிவுகள் எனக்கூறப்படுகிறது. கசிந்து போகும் தன்மையுடையது. சுண்ணக்கல் படிவுடன் நீர் உள்ளது. சுண்ணக்கல்லிருந்தே தண்ணீர் கிடைக்கிறது. எனவே இப்படிவு பாதிக்கப்டுமாக இருந்தால் எதிர்காலத்தில் பெறும் நீரும் பாதிக்கப்படுகின்றது.

 

 

 

 

சனோஸ் முஹம்மத்- புவியியல் ஆசிரியர், கரத்தீவ முஸ்லிம் மகா வித்தியாலயம்.

இங்குள்ள மக்கள் தொடர்பில் எந்தவொரு ஆட்சியாளருக்கும் கவலையில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். கொழும்பு குப்பையை பௌத்தர்கள் வாழும் இடத்தில் ஏன் போடுகிறார்களில்லை? சீமெந்து தொழிற்சாலையை ஏன் அங்கு அமைக்க முடியாது? எமது சமூகத்தில் தட்டிக்கேட்க ஒருவரும் இல்லையே. குப்பை போடுவதால் ஆபத்தில்லை என அரசாங்கம் உள்ளிட்ட ஒருசாராரும் குப்பை போடுவதால் ஆபத்துக்கள் வரும் என இன்னொரு சாராரும் கூறுகிறார்கள். ஆபத்தில்லை என்பது உண்மையென்றால் வில்பத்து சரணாலயத்திற்கு உட்பட்ட பொம்பரிப்பு வெளி, மூலக்கண்ண வெளி, மல்கன் வெளி போன்ற பிரமாண்ட வெளிகளில் குப்பைகளை கொட்டலாமே. ஏன் அங்கு கொட்டாமல் மக்கள் குடியிருப்புக்கு அருகில் கொண்டு வந்து போடுகிறார்கள்.

அப்துல் அஸீஸ்- ஓய்வுபெற்ற ஆசிரியர்

 

 

 

பின்னணி

கழிவுப் பிரச்சினை தேசிய ரீதியிலான பாரியதொரு சிக்கலாக தலைதூக்கியுள்ளது. சாதாரணமாக இலங்கையில் தினமும் 8000 மெட்ரிக் டொன் திண்மக் கழிவு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் மேல் மாகாணத்தில் மட்டும் நாளாந்தம் 3200 மெட்ரிக் டொன் உருவாக்கப்படுகின்றது. அதிலும் கொழும்பு நகரசபை எல்லைக்குள் மாத்திரம் தினமும் 1000 மெட்ரிக் டொன் திண்மக் கழிவுகள் தோற்றுவிக்கப்படுவதுடன் அவற்றுள் 750 மெட்ரிக் டொன் கழிவு மாத்திரமே ஒரு நாளைக்குள் சேகரிக்கப்படுகின்றது. இதில் முக்கியமான விடயம் இலங்கையின் எந்தவொரு உள்ளுராட்சி சபையும் தமது எல்லைப் பிரதேசத்தினுள் தோற்றுவிக்கப்படும் திண்மக் கழிவுகளை முழுமையாக அகற்றுவதில்லை என்பதாகும். கழிவுகளை முறையற்ற விதமாக திறந்த இடங்களில் கொட்டுவதே பாரிய சுற்றாடற் பிரச்சினையாக உள்ளது.

 

 

 

இதன் காரணமாக அண்டிய பிரதேசங்களில் மண், நீர், நிலத்தடி நீர்நிலைகள் வெகுவளவில் மாசடைந்து காணப்படுகிறது. 2017 ஏப்ரல் 14ஆம் திகதி மீதொட்டமுள்ளை குப்பை மேடு சரிந்து பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதனை அடுத்து கழிவகற்றலுக்கான மாற்றுப் பிரதேசமொன்றின் தேவை உணரப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மாநகர சபை தற்காலிகமாக முத்துராஜவலை பகுதிக்கு அண்மையிலுள்ள ஒரு சதுப்பு நிலத்தில் குப்பைகளை கொட்டி வருகிறது. தற்பொழுது இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதனால் இதுவும் சட்டப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இப்பின்னணியில் மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ‘மெட்ரோ கொழும்பு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டம்’ எனும் பெயரில் கொழும்பின் திண்மக்கழிவுகளை புத்தளம், அறுவைக்காட்டில் சுண்ணக்கல் அகழ்வு நில அகழியில் நிரப்புவதற்கான திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பான வர்தகமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

 

 

 

செயற்திட்டம்

திண்மக்கழிவுகளை ஏற்றுவதற்கு களனி பிரதேசத்தில் 18 ஹெக்டயரில் ஒரு பரிமாற்று நிலையம் அமைக்கப்படும். முதலில் 1200 மெட்ரிக் டொன் நிறைகொண்ட முற்றிலும் மூடப்பட்ட தாங்கிகள் விஷேட ரயில் மூலம் ஏற்கனவே உள்ள ரயில் பாதையினூடாக களனி முதல் புத்தளம் ஊடாக அறுவக்காட்டுக்கு கொண்டு சென்று 1.3 ஹெக்டயரில் அமைக்கப்பட்டுள்ள அறுவக்காட்டு பரிமாற்று நிலையத்தில் இறக்கி அங்கிருந்து 47 ஹெக்டயர்கள் கொண்ட அறுவக்காடு நில அகழி நிரப்பல் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

 

 

 

அறுவக்காடு 

முன்னோர் சுவைத்த அருமைக்காடு
என்னோர் கண்ட அறுவைக்காடு
பின்னோர் காண அது சுடுகாடு

 

 

 

புத்தளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கின்ற கோட்டிற்கு வடக்கே அடையற் சுண்ணாம்புக்கல் காணப்படுகின்றது. இது மயோசீன் காலத்தில் கடலிலிருந்து மேல் உயர்த்தப்பட்ட சேதனவுறுப்பு அடையற் பாறையாகும். அறுவைக்காடு சுண்ணக்கல் அகழ்வுப் பகுதி 5141 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இப்பிரதேசம், நாட்டின் மிகப்பெரிய சுண்ணக்கல் அகழ்வுப் பகுதியாக உள்ளது. இங்குள்ள சுண்ணக்கல் அகழ்வு குவாரியிலிருந்து 41 கி.மீ தூரத்திலுள்ள புத்தளம் ஐNளுநுநு சீமெந்து சியம் சிட்டி சீமெந்து (லங்கா) நிறுவனத்திற்கு ரயில் மூலம் சுண்ணக்கல் கொண்டு செல்லப்படுகின்றது. சுண்ணக்கல் குவாரியில் 300-400 பேர் கூலி வேலை செய்கிறார்கள்.

 

 

 

 

பாதிப்புக்கள்

வனாத்தவில்லுவ பிரதேச செயலகத்தில் 17 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றுள் 5 கிராம சேவகர் பிரிவுகள் அறுவைக்காட்டுக்கு மிக அண்மையில் (2-3 கிமீ ஆரைக்குள்) அமைந்துள்ளன. கரைத்தீவு வடக்கு, கரைத்தீவு தெற்கு, மங்களபுர, சேரக்குளிய மற்றும் ரல்மடுவ ஆகிய பகுதிகளே அவை. அறுவைக்காடு குவாரி நிலத்தின் மேற்கு எல்லை சேரக்குளிய மீன்பிடி பிரதேசத்தினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சேரக்குளிய கிராம சேவகர் பிரிவில் 389 வீடுகளில் 1723 பேர் வசிக்கிறார்கள். இங்கு சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களே அதிகவில் உள்ளனர். இங்குள்ள பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழிலை நம்பியுள்ளனர். சீமெந்து கல்குவாரி வெடிச்சத்தத்தின் அதிர்வில் பெரும்பாலான வீடுகளின் யன்னல்கள் உள்ளிட்ட சுவர்கள் வெடிப்புக்குள்ளாகியிருப்பதை காண முடிந்தது.

 

 

 

 

குவாரியில் இருந்து வெளியாகும் தூசுக்கற்துண்டுகள் தமது வீடுகளை மூடிவிடுவதாகவும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சுண்ணக்கல் குவாரியுள்ள அகழிகளில் திண்மக்கழிவுகளை கொட்டுவதனால் அதிலுள்ள நச்சுவாயுக்கள் கடலில் கலந்து மீன்வளம் பாதிப்படையும் என அம்மக்கள் தெரிவிக்கிறார்கள். ஏனைய பிரதேசங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த சேரக்குளிய கடற்பகுதியில் இன்று விரல் விட்டெண்ணக்கூடிய சிலரே மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உயர் பெறுமதிமிக்க நண்டு போன்ற மீன்கள் இபப்குதியில் காணப்படுகின்றன. அனல் மின்சார நிலையத்தின் உருவாக்கத்தை தொடர்ந்து அதிகளவான மீனவர்கள் கொழும்பில் பணியாற்றி வருவதாகவும் அம்மக்கள் தெரிவித்தார்கள்.

 

 

 

 

கரைத்தீவு வடக்கு கிராம சேவகர் பிரிவில் 2793 பேர் உள்ளார்கள். இங்கு 99 வீதமானவர்கள் முஸ்லிம்கள். அறுவைக்காட்டுக்கு ஒன்றரை கி.மீற் தூரத்தில் அமைந்துள்ள இப்பிரதேசத்தின் மக்கள் மீன்பிடித் தொழிலையும் உப்புப் பயிர்ச்செய்கையையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மங்களபுர கிராம சேவகர் பிரிவில் 1213 பேர் வசிக்கிறார்கள். 99 வீதமானவர்கள் சிங்களவர்கள். ரல்மடுவ பிரிவில் 953 பேர் உள்ளார்கள். இம்மக்களுள் பெரும்பாலானவர்கள் மீன்பிடித் தொழிலிலும், இறால் வளர்ப்பிலும், உப்பு உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மழை காலத்தில் குப்பை மேட்டிலிருந்து கழிவுகள் களப்பை நோக்கி அடித்து வருப்படும். புத்தளம் களப்பு மாசடைவது என்பது மேற்கூறப்பட்ட உற்பத்திகளை முற்றாக அழியச்செய்வதோடு இறால் ஏற்றுமதியால் பெறப்படும் அந்நியச் செலாவணியிலும் அது பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

 

 

 

 

குப்பை கொட்டுமிடம் அமைந்திருப்பது வில்பத்து பூங்காவின் உயர் பாதுகாப்பு வலயத்திலாகும். இந்த வலயம் அமைந்திருப்பது வில்பத்து பூங்காவிற்கு மிக அண்மிய பிரதேசத்திலாகும். இயல்பாகவே யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம். எனவே வழமையாக வரக்கூடிய யானைகளையும் விட அதிகளவிலான யானைகள் குப்பை மேட்டின் பால் மோகங் கொண்டு கங்கைவாடி, முரண்டாவளி, பழைய எலுவன்குளம், அச்சமூலை, இறால்மடு, மங்களபுறம், புதிய எலுவன்குளம் ஆகிய கிராமங்களை நாசம் செய்துகொண்டு அப்பகுதிகளிலுள்ள இராணுவ வீரர்களின் முகாம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை ஊழியர்களின் வீடுதிகளை தாக்கிக்கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குப்பை மேட்டுப்பகுதிகளுக்கு யானைகள் வருவதை தடுக்க முடியாமல் போகும். யானை வராமல் மின்சார வேலியமைப்பதாக கூறுவது எந்தளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பih சொல்ல முடியாது.

 

 

 

கொழும்பிலிருந்து அறுவைக்காட்டுக்கு எடுத்துவரும் குப்பை கழிவுகளை கொட்டுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ‘வெடிஹிட்டிய’ என்னும் இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னரான மயோசீன் யுகத்திற்கு சொந்தமான சுவடுகள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜயன் வந்திரங்கிய குவேனியின் ராச்சியமும் தம்பபண்ணி என சொல்லப்படும் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. கலாநிதி பரணவிதான வரலாற்றுக்கு முற்பகுதியில் முள்ளந்தண்டுகளை கொண்ட முள்ளந்தண்டுகள் இல்லாத கடல்வாழ் உயிரினங்களான திமிங்கிலம் மற்றும் டொல்பின் போன்ற 40 வகையான இனங்களை ஆவணப்படுத்தியுள்ளார். எனவே இங்கு குப்பைகளை கொட்டி மயோசீன் யுகத்திற்கு சொந்தமான விலைமதிக்க முடியாத சான்றுகளை அழிப்பது பெறுமதியான செயனெக் கருத முடியுமா? ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய இடத்தில் குப்பைகளை கொட்டுவது எவ்வளவு மடமைத்தனமான செயல்?

 

 

 

கழிவுகள் நிரப்பப்படும் இடம் அமைந்திருப்பது, வில்பத்து தேசிய பூங்காவில் அமைந்துள்ள கலாஓயாவின் கிளை ஆறான லுணு ஓயாவிலிருந்து 100 தொடக்கம் 150 முpற்றர் தூரத்திலாகும். ஒக்டோபர், நவம்பர்,டிசம்பர் மாதங்களிலேயே புத்தளம் பிரதேசம் அதிகூடிய மழைவீழ்ச்சியை பெறுகிறது. அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படுவது நவம்பர் மாத கடைசிப்பகுதி மற்றும் டிசம்பர் மாதங்களிலாகும். 1957ஆம் ஆண்டு ஏற்படட்ட வெள்ளப்பெருக்கினால் பழைய எலுவன்குளம் நீரில் மூழ்கியது. லுணு ஓயாவினூடாகவே கழிவுகள் அடித்துச்செல்லப்பட்டு களப்பினுள் கலக்கிறது. கடல் மின்சாரத்தின் காரணமாக களப்பிலும் நீர் அசைவுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் வெள்ளப்பெருக்கேற்பட்டு நச்சுக்கழிவுகள் கடலில் கலப்பதன் மூலம் பெறுமதியான மீன்வளங்கள் பாதிக்கப்படுவதை நிறுத்த முடியாமல். போகும். அத்துடன் மக்கள் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாமல் போகும்.

 

 

 

அத்துடன் அறுவைக்காட்டில் குப்பை பொட்டும் திட்டத்தில் பின்வரும் செலவுகளையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. குப்பைகளை சேகரிப்பது, கொட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லல், குப்பைகளை நறுக்கும் பொறிக்கான கிரயம், பொதி செய்யும் பொருட்களுக்கான கிரயம், கிரேன் கொஸ்ட், சழிவுநீர் சிகிச்சையளித்தல், பொறிகளுக்கான கிரயம் மற்றும் குப்பை கொட்டும் தளமான அறுவைக்காட்டில் நடாத்தப்படும் சிகிச்சைக்கான கிரயம், வெற்று அடைப்பான்களை கழுவுவதற்கான கிரயம், குப்பைகொட்டும் தளத்திற்கு செல்வதற்கான ரயில் கடவைகளை விரிவுபடுத்துவதற்கான கிரயம், அறுவைக்காடுக்கான .ரயில் பயணத்திற்காக ஒரு நாளைக்கு செல்லும் செலவு – 45கி.கிராம். நிறையினை கொண்ட பெட்டிக்கான 1 கி.மீ தூரத்திற்கான கிரயம் ரூபா 925 ஆகும்.

 

 

 

925*27 பெட்டிகள் *170 KM += 191,058,750/- ஆகும். அத்தோடு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவு, யானையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டும் காயமடையும் நபர்களுக்கான சேதமுறும் சொத்துக்களுக்கான நட்டஈடும் கிரயமும், சூழல் மாசடைவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான செலவு, மீன் உற்பத்திக்கு ஏற்படும் ஈடுசெய்யமுடியாத இழப்பு, எனவே இவ்வாறான இழப்புக்களை தரும் செயற்திட்டம் எவ்வகையில் நிலைபேறான அபிவிருத்தித் திட்டமாக அமைய முடியும்? மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு…

 

 

 

 – ஹெட்டி ரம்ஸி – உதவி : முஜாஸ் அலி, நஷ்பான் கபூர் 

One comment

  1. அரசியல்வாதிகளும்; மக்களும் சேர்ந்து எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை கொண்டு சென்று இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். புத்தளத்தை பொறுத்த வரை கட்சி பேதங்களும். சுயநலமும் அதிகரித்துக் காணப்படுவதும் எப் பிரச்சினையும் தீர்க்க முடியாத காரணம். எனவே எல்லோரும் ஒன்றுபடுவோம். ஒன்றாகச் செயற்படுவோம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Leave a Reply

Your email address will not be published.