Puttalam today Exclusive : ” பஜாஜின் ஆட்டோக் கார் தடைகளைத் தாண்டுமா..? எப்படி இருக்கிறது “பஜாஜ் கியூட்” Full story

· · 2742 Views

பஜாஜின் க்யூட்டைப் பார்த்தால், ‘இது சேர் இல்லை; சேர் மாதிரி’ என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. ஆம், ‘இது கார் இல்லை; கார் மாதிரி!’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். இதை ‘மைக்ரோ கார்’ என்றும் சொல்கிறார்கள்; ‘நான்கு சக்கரம் கொண்ட ஓர்ஆட்டோ’ என்றும் கமென்ட் செய்கிறார்கள். ஆனால், ஆட்டோமொபைல் அகராதிப்படி சொல்வது என்றால், இது ஒரு நான்கு சக்கர வாகனம். ஆங்கிலத்தில் ‘குவாட்ரி சைக்கிள்!’

p13a

குவாட்ரி சைக்கிள் என்றால் என்ன?

முதன்முதலில் குவாட்ரி சைக்கிளைத் தயாரித்தது ஃபோர்டு நிறுவனம்தான். 1890-களில் குதிரைவண்டிகளுக்குப் பதிலாகத் தயாரிக்கப்பட்டவைதான் குவாட்ரி சைக்கிள்கள். நான்கு சக்கரங்கள் கொண்ட ரிக் ஷா போலவே ஆரம்பத்தில் இருந்த குவாட்ரி சைக்கிள்கள், நாளடைவில் கார் போன்ற தோற்றத்தில் வர ஆரம்பித்தன.

ஐரோப்பாவில், குறைவான தூரங்களுக்கு, நார்மலான வேகத்தில் செல்ல குவாட்ரி சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நான்கு மீட்டருக்குள் இருக்க வேண்டும்; 1,000 கிலோவுக்குள் இருக்க வேண்டும் என்று நம் நாட்டில் ஹேட்ச்பேக் கார்களுக்கு விதிகள் இருப்பதுபோல, குவாட்ரி சைக்கிள்களுக்கும் பல விதிகள் உள்ளன.

மூன்று மீட்டருக்குள்தான் நீளம் இருக்க வேண்டும்; 450 கிலோ எடையைத் தாண்டக் கூடாது; 70 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது; 300 சிசிக்குள்தான் இருக்க வேண்டும் போன்ற பல விதிகளின் கீழ்தான் குவாட்ரி சைக்கிள் தயாரிக்க வேண்டும். அப்படித் தயாரிக்கப்பட்டதுதான் பஜாஜின் க்யூட்.

எப்படி வந்தது க்யூட்?

2012 ஆட்டோ எக்ஸ்போவில், பஜாஜ் நிறுவனத்தின் ஸ்டாலில் இருந்த அந்த காரை எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். பெயர்ப் பலகையில் ‘RE60’ என்ற எழுத்துக்களில் அப்போதே இது பரபரப்பைக் கிளப்பியது. ஏனென்றால், RE என்றால், ‘ரியர் இன்ஜின்,’ அதாவது பஜாஜின் ஆட்டோ ரிக் ஷாக்கள்தான் ‘RE’ என்று அழைக்கப்படுகின்றன.

‘அப்படியென்றால், இது ஆட்டோவா?’ என்று அங்கேயே கேள்வி கேட்டனர். ‘பஜாஜுக்கு எதுக்கு இந்த வேலை. பேசாமல் ஆட்டோவை மட்டும் தயாரிக்க வேண்டியதுதானே?’ என்று நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தன. ‘இதை கமர்ஷியலில் சேர்ப்பீர்களா… பிரைவேட் வாகனங்களில் சேர்ப்பீர்களா?’ என்று பஜாஜைக் கேள்விகளால் துளைத்தெடுத்தன மீடியாக்கள். ‘ஏற்கெனவே சாலை விபத்துகள் அதிகமாக இருக்கின்றன. வெறும் 450 கிலோ கொண்ட இந்த காரால் விபத்துகள், உயிர்ப் பலிகள் நிச்சயம்!’ என்று ஆன்லைனில் கட்டுரைகள் வந்தன. எல்லாவற்றையும் சவாலாகவே எடுத்துக்கொண்டது பஜாஜ்.

1. இன்டீரியர், நானோவை நினைவுபடுத்துகிறது. பேஸிக்கான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மியூஸிக் சிஸ்டம் மட்டும் உண்டு. ஏ.சி, பவர் விண்டோ போன்ற வசதிகளெல்லாம் கிடையாது.

2. முக்கியமான பொருட்கள் வைத்துக் கொள்ள அண்டர் சீட்டில் 95 லிட்டர் ஸ்டோரேஜ்…

3. சின்ன 12 இன்ச் டயர்கள், க்யூட்டுக்கு ஓகே! ஆனால், திருப்பங்களின்போது கவனமாக இருக்க வேண்டும்.

4 .சின்ன காராக இருந்தாலும், ஆங்காங்கே சின்னச் சின்னப் பொருட்களை வைக்க இடம் இருப்பது வசதி.

5. லிக்விட் கூல்டு 216 சிசி இன்ஜின் பின் பக்கம் மவுன்ட் ஆகியிருக்கிறது. இதனால் பின் பக்கப் பயணிகளுக்கு சூடு நிச்சயம்.

6. முன் பக்கமும் பொருட்கள் வைக்க 60 லிட்டர் இடம்…

ஆட்டோஎக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில், சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு RE60 தயாரிக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தது பஜாஜ். இந்தியன் ஆட்டோமொபைல் அசோஸியேஷனில் மட்டுமல்ல; போட்டி கார் தயாரிப்பாளர்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அரசு சார்பாக ஒரு ஸ்பெஷல் கமிட்டி அமைக்கப்பட்டது. குவாட்ரி சைக்கிள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி, கடைசியாக பிப்ரவரி 2014-ல் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது.

‘அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு’ என்பதுபோல, ‘பஜாஜின் குவாட்ரி சைக்கிள் தயாரிப்புக்கு அரசு ஒப்புதல் தெரிவிக்கிறது’ என்று சந்தோஷ அறிக்கை வந்தது. ஆனால், சில ஸ்பெஷல் கண்டிஷன்களைப் போட்டது அந்த ஸ்பெஷல் கமிட்டி.

‘ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் குவாட்ரி சைக்கிள்கள்போல இருக்க வேண்டும்; இதை கமர்ஷியல் பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்; தனியார் வாகனமாக வரக் கூடாது; மணிக்கு 70 கி.மீ வேகத்தைத் தாண்டக் கூடாது; நீளம் மூன்று மீட்டருக்குள்தான் இருக்க வேண்டும்; இன்ஜின் சக்தி 20bhp-க்கு மேல் இருக்கக் கூடாது; எடை 450 கிலோவுக்குள்தான் இருக்க வேண்டும்!’ – இவைதான் ஸ்பெஷல்  கமிட்டியின் கண்டிஷன்கள். அதற்குப் பிறகும் சோதனைகள் நிற்கவில்லை. ‘அப்படியென்றால் பாதுகாப்பு?’ என்று திரும்பவும் நக்கலாகவும் ஆக்ரோஷமாகவும் கேள்விகள் எழுந்தன. ஆனால், பஜாஜ் அசரவில்லை.

2016 ஏப்ரல் மாதத்தில், ‘யுரோ என்கேப்’-க்கு க்ராஷ் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டது க்யூட். அட! செவர்லே பீட், ஹூண்டாய் இயான், கிராண்ட் i10, செலெரியோ போன்ற ஹேட்ச்பேக் கார்களே க்ராஷ் டெஸ்ட்டில் (குளோபல் என்கேப்) ஃபெயில் ஆக, க்யூட்டாக ‘1 ஸ்டார்’ வாங்கிச் சிரித்தது க்யூட்.

‘பாதுகாப்பிலும் பாஸ் ஆயிடுச்சா?’ என்று பொங்கின மற்ற நிறுவனங்கள். க்யூட்டுக்கு எதிரான கேள்விகள் அனைத்தும் காலியான நிலையில், புனேவில் உள்ள பஜாஜின் சக்கான் தொழிற்சாலையில், வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகிக்கொண்டிருக்கிறது ‘க்யூட்’ எனும் இந்த குவாட்ரி சைக்கிள். ஆட்டோமொபைல் வரலாற்றில் டாடாவின் நானோவுக்கு அடுத்தபடியாக, அதிக எதிர்ப்பைச் சந்தித்த கார் என்றால், அது க்யூட்தான். இன்னும்கூட விற்பனைக்கான அரசு அனுமதி கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறது பஜாஜ். இந்த நிலையில், சக்கான் தொழிற்சாலையில் க்யூட் காரை ஓட்டிப் பார்த்தோம்.

எப்படி இருக்கிறது க்யூட்?

சிலருக்கு நீளமான உரைநடைக் கவிதைகள் பிடிக்கும்; சிலருக்கு நவீனக் கவிதைகள் பிடிக்கும்; சிலருக்கு ‘ஹைக்கூ’ பிடிக்கும்; க்யூட்டை ஹைக்கூ வரிசையில் சேர்க்கலாம். இதன் டிஸைன் அப்படித்தான் அடக்கமாக, சிலேடையாக இருக்கிறது. ‘மூன்று மீட்டருக்கு மேல இருக்கக் கூடாது’ என்று சீரியஸாக இதன் டிஸைனர்கள் க்யூட்டை வடிவமைத்திருப்பது தெரிகிறது.

‘பார்க்குறதுக்கு ஆட்டோ மாதிரிதான் இருக்கு’ என்று சாலையில் விமர்சனங்கள் நிச்சயம் விழும். காரணம், க்யூட்டின் பின் பக்கத்தை நீங்களே ஒருமுறை பாருங்கள். ஒரு ‘RE’ பஜாஜ் ஆட்டோவையும், க்யூட்டையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தால், எட்டு வித்தியாசங்கள்தான் கண்டுபிடிக்க முடியும். கிரவுண்ட் கிளியரன்ஸ்கூட அதே 180 மிமீதான். பஜாஜ் டிஸைனர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது, எப்படியும் 450 கிலோவைத் தாண்டக் கூடாது என்பதுதான். ஹாலிவுட் படங்களில் விமானமோ, கப்பலோ ஆபத்தில் இருக்கும்போது, எடைக் குறைப்புக்காக பல அத்தியாவசிய விஷயங்களைத் தூக்கி எறிவார்களே…

அதுபோல் உள்பக்கத்திலும் எடைக் குறைப்புக்காகப் பல விஷயங்கள் காணாமல் போயிருக்கின்றன. இன்டீரியர் கிளாடிங், கார்பெட், சவுண்ட் இன்சுலேஷன், ஏ.சி, அட இவ்வளவு ஏன் ஜன்னல்களே கிடையாது க்யூட்டில். ஜன்னல்களுக்குப் பதில் பிளாஸ்டிக் ஃபாயில்கள் எனப்படும் லேசான கண்ணாடிபோன்ற உலோகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தேவையான நேரங்களில், இதைச் சுருட்டிக் கொள்ளலாம். இதனால், ‘கேபின் பெருசா இல்லையே… ‘லெக் ரூம் பத்தலையே… காத்து வரலையே’ என்றெல்லாம் குறை சொல்வது அபத்தம்.

க்யூட்டின் சென்டர் கன்ஸோல் டிஸைன், அப்படியே நானோவைப் பிரதிபலிக்கிறது. 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் செம லைட் வெயிட். டேஷ்போர்டிலேயே ஃபிட் செய்யப்பட்டிருக்கும் கியர் லீவர், பயன்படுத்த செம ஃபன்னாக இருக்கிறது. ஏ.சி போன்ற விஷயங்கள்தான் இல்லை; அட்லீஸ்ட் சின்னச் சின்ன விஷயங்களாவது இருக்கட்டும் என்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆடியோ சிஸ்டம் வைத்து வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த முயற்சிக்கிறது பஜாஜ். இதில் 1+3 எனும் விகிதத்தில் நான்கு பேர் அமரும் அளவுக்குத்தான் சீட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கங்கே வாட்டர் பாட்டில், குட்டிக் குட்டி லக்கேஜ்கள் வைக்க கதவு, முன்பக்கத்தில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இன்ஜின், நானோ போலவே பின் பக்கம் இருப்பதால், பின்பக்கப் பயணிகள் சூட்டைத் தாங்கப் பழகியிருக்க வேண்டும். 216 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு பெட்ரோல் இன்ஜின், 13.5bhp பவரை வெளிப் படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் க்யூட்டுக்கு க்யூட்டான விஷயம். ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், க்யூட்டின் டாப் ஸ்பீடு 70 கி.மீ வேகத்தைத் தாண்டாது. எனவே, லோ கியரிங்கின்போது இதன் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ‘ஃபுட் போர்டு’ அடிக்கும் கல்லூரிப் பையன்கள்போல் துடுக்காக இருக்கிறது. 30 முதல் 40 கி.மீ வரை இதை நாம் ஜாலியாக உணர முடிகிறது.

இவ்வளவு லைட் வெயிட்டான காரில், ஸாரி… குவாட்ரி சைக்கிளில், நாம் ஓட்டுதல் தரத்தை மிகப் பிரமாதமாக எதிர்பார்க்க முடியாது. நினைத்ததுபோலவே ஸ்டெபிலிட்டி விஷயத்தில் காற்றில் அலைபாய்ந்து மனதை பயமுறுத்துகிறது க்யூட். அதுவும் திருப்பங்களில் ஸ்லோ ஸ்பீடின்போதே சின்ன 12 இன்ச் வீல்கள், லிஃப்ட்டிங் ஆவது ஃபன்னாகவும் பயமாகவும் இருக்கிறது. அதிக வேகம் போகாது என்பதால், எப்போதுமே க்யூட் நமது கன்ட்ரோலில்தான் இருந்தது. ஆனால், அவசரமான நேரங்களில் பிரேக்குகளின் மீது ஏறி நின்றால்தான் முழு பலன் கிடைக்கும். 2,752 மி.மீ நீளத்துக்குள் இருந்தாலும், இதன் டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் கொஞ்சம் டைட்டாகவே இருக்கிறது. அதாவது, 7 மீட்டர் எடுத்துக்கொள்வதால், யு-டர்ன் அடிப்பது பெரிய வாகனங்களைத் திருப்புவதுபோல் சிக்கலாக இருக்கிறது.

க்யூட் ஓகேவா?

ஏகப்பட்ட விஷயங்களைத் தியாகம் செய்து, க்யூட்டை வெற்றிகரமாக 400 கிலோவுக்குள் தயார் செய்துவிட்டது பஜாஜ். சொகுசு கிடைக்காது; பெர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடியாது; வசதிகள்… மூச்! ஆனால், ஒரு மூன்று சக்கர ஆட்டோவைவிட பாதுகாப்பான கார், இந்த க்யூட் என்பதில் சந்தேகமே இல்லை. ‘அடையார் போகணும்’ என்று ஓப்பனாக ஆட்டோவில் உட்காருவதைவிட, க்யூட்டில் பயணிக்கும்போது நிச்சயம் ஒரு நிம்மதி பிறக்கும். ஓட்டுதலைப் பொறுத்தவரை, நீண்ட தூரப் பயணத்துக்கான சொகுசு கார் வேண்டும் என்பவர்கள், க்யூட் விஷயத்தில் மியூட் ஆக இருந்துவிடுதல் நலம். வெளிநாடுகளில் விற்பனை ஆகிக்கொண்டிருந்தாலும், சீக்கிரம் இந்தியாவுக்கு வர வேண்டும் க்யூட்!!

( இந்த செய்தி Paid நியூஸ் – copy paste செய்கிறவர்கள் “puttalam today ” என்று போடவும் )

Leave a Reply

Your email address will not be published.