News break : சாஹிராவுக்கு இடம் மாற்றப்பட்டார் வெட்டாளை அதிபர் ஜப்பார்..!! அதிபர் பதவியை கொடுக்க மறுக்கும் அதிபர் யஹ்கூப்

· · 1303 Views

புத்தளம் அசன்குத்தூஸ் பாடசாலை அதிபர் ஜப்பார், புத்தளம் சாஹிராத்  தேசியப்பாடசாலைக்கு   இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  புத்தளம்  கல்வி  வலய  அதிகாரிகளை மேற்கோள்  காட்டி பு த்தளம் கல்வி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

இதே வேளை புத்தளம் சாஹிராத் தேசியப்படசாலையின் நலன் விரும்பிகளால் நீண்ட நாள் முயற்சியின் பயனாக சாஹிராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர் ஜப்பார் அவர்களுக்கு அங்கு தமது கடமைகளைப் பொறுபேற்க தற்போதைய அதிபர் எஸ். ஏ. சி. யஹ்கூப் அனுமதியளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

 

 

 

 

இது பற்றி நம்மிடம் கருத்து தெரிவித்த சாஹிராவுக்கான நலன்விரும்பி ஒருவர், ” அதிபர் யஹ்கூப்பின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத  ஒரு விடயம்   என்று தெரிவித்தார்.

 

 

 

 

“நாங்கள் கடந்த ஒரு வருட கால போராட்டத்தின் பின்னர் இப்போதுதான் அதிபர் ஜப்பாரை சாஹிராவுக்கு அதிபராக இடமாற்றியுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் அதிபர் யஹ்கூப் அவர்கள் முரண்டு பிடிப்பதில் எவ்வித அர்த்தங்களும் இல்லை. ஏற்கெனவே அதிபர் யஹ்கூப், தனது தேகாரோக்கியக் குறைப்பாடு சம்பந்தமாக கல்வி அமைச்சுக்கு தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அடிப்படையிலேயே நங்கள் அதிபர் ஜப்பாரை சாஹிராவுக்கு இடமாற்றியுள்ளோம்.

 

 

 

 

நாங்கள் அதிபர் யஹ்கூப்பின் சேவைகளையோ அல்லது அவரின் அர்ப்பணிப்புகளையோ  கொச்சைப்படுத்தவில்லை. அவர் புத்தளம் சாஹிராவுக்காக  நீண்ட  தியாகங்களை செய்தவர். அவர் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி தன்னை விடுவிக்குமாறு அவரே கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். இந்த நிலையில் நாம் மிகவும் பிரயத்தனப்பட்டு கொண்டு வந்த அதிபர் ஜப்பாரிடம் பதவியைக் கொடுப்பதே பண்பாடானது. இது புத்தளம் சமூகம் சம்பந்தப்பட்ட கல்வி விடயம். தொடர்ந்தும் அவர் முரண்படுவாறேயானால்  நாம் பெற்றோர்கள்  மற்றும் மாணவர்களைத் திரட்டி கடுமையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

 

 

 

 

இது சம்பந்தமாக,  புத்தளத்தில் உள்ள சிரேஷ்ட கல்வி அதிகாரி நம்மிடம் தெரிவிக்கையில்,

 

 

 

” அரசாங்க உத்தரவின் படி அதிபர் ஜப்பார் ஒரு சாதாரண ஆசிரியராகவே புத்தளம்சாஹிராத் தேசியக் கல்லூரிக்கு நியமனம் செய்யப்டுள்ளார். அவரை அதிபராக நியமிக்கும்படியான  உத்தரவுகள் ஏதும்  இல்லை.

 

 

 

 

என்றாலும், அதிபர் ஜப்பாரை சாஹிராவின் அதிபராக நியமிப்பதற்கு புத்தளம் சாஹிரா சார்ந்தவர்கள் நீண்ட காலமாக முயற்சி செய்தது தற்போதைய அதிபர் யஹ்கூப்புக்கு தெரிந்திருக்கும். அதிபர் தரத்தில் கூடுதல் பெறுபேறுகளைக்   கொண்ட  சிரேஷ்ட அதிபர் யஹ்கூப்பை  பலவந்தப்படுத்தியோ,  அல்லது அழுத்தங்களை பிரயோகித்ததோ வேறொரு பாடசாலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்துவது  எமது அமைச்சுக்கு இயலாத காரியம். இது பொதுவான, சமூகம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் இதற்க்கான  மாற்று நடவடிக்கைகளை  பெற்றோர்களே செய்ய வேண்டும் என அவ்வதிகாரி  தெரிவித்தார்.

 

 

இதேவேளை ,  முன்பு தற்காலிக அதிபராக இருந்த  ராசீக்  விடயத்தில் போன்று இல்லாமல்,  களேபரங்களை  தடுக்கும் பொருட்டு ஒரு அமைதியான அதிகார மாறுதலுக்கான முயற்சியை புத்தளம் கல்வி வலய அதிகாரிகளால்  மேற்கொள்ளப்பட்ட போதும், அது  வெற்றியளிக்கவில்லை என செய்திகள் கூறுகின்றன.

 

 

 

தான் தொடர்ந்தும்  சாஹிராவிலேயே பணிபுரிய உள்ளதாக அதிபர் யஹ்கூப் கூறி விட்டதாகவும் அறிய முடிகிறது.

 

 

 

 

 

இந்த பிரச்சனை சம்பந்தமாக  அதிபர் யஹ்கூப் அவர்களை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் , இக்கட்டுரை எழுதும் வரை அவரின்கைப்பேசியில் இருந்து பதிலெதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

 

  • அப்துல் கலாம் 

 

Leave a Reply

Your email address will not be published.