N.F.G.G. Politics : இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்!!

· · 507 Views
 By : Mohamed Nisthar
இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்!
சுதந்திர காலம் தொட்டு தமிழர் ஓரங்கட்டல் மிக வெளிப்படையாக நடைபெற்றதால்  நாட்டின் ஐக்கியத்தில் ஏற்பட்ட மெல்லிய வெடிப்பு 1976  நாட்டை பிரிப்பதற்கான ஒரு தொகுதி மக்களின் ஆணையாக வெளிப்பட்டதும் அதை அடிப்படையாக வைத்து பிற்பட்ட 33 ஆண்டுகள் நம் நாடு பினோக்கி நகர்ந்ததும் வரலாற்றின் ஒரு பக்கம்.  இந்த வரலாற்று பக்கத்தில் சிறு பந்தியில் எழுதப்பட்டதுவே  “முஸ்லீம் அரசியல்” என்ற ஒரு புதிய அம்சம்.
“சிறு பந்தி” என்பதனால்  ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் அரசியலில் அநாதைகளாக இருந்தார்கள் என்பதல்ல. இந்த காலத்துக்கு முற்பட்ட நமது சமூகம் அரசியலில்  நமது பலம்(இன்மை), அரசியல் அறிவு, நிலவிய சூழ் நிலைகள், சமூகத் தேவைகளும் அவற்றை அடைந்தகொள்ள முடியுமாயிருந்த நிலைமைகள் எல்லாம் நம்மை தேசிய கட்சிகளோடு ஒட்டிச்செல்லும்  போக்குக்கு வழி வகுத்தது. அதில் தவறுகள் நடந்தேறாமலும் இல்லை. என்றாலும்  ஒட்டு மொத்த முஸ்லீம்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலோ, நாட்டின் அரசியல், பொருளாதார சமூக வாழ்வியலில் வெளிப்படையான ஓரங்கட்டலோ ஏற்படாதவாறு நம் முன்னைய தலைவர்கள் கூடிய கவனம் செலுத்தினர்.
அதனால் ஸ்ரீலங்கா முஸ்லீம்களின் நிலை மெது மெதுவாகவேனும் முன்னோக்கி சென்று கொண்டே இருந்தது. இது நம் சமூகத்துக்கான அடிப்படை அரசியல் பாடம். ஆனால் நாம் கற்றுக் கொள்ளவில்லை. பாடத்தை சரியாக கற்கத் தெரியாமல்,  அடிக்கடி ஆசிரியர்களை மாற்றும் நடவடிக்கையே இன்றும் தொடர்கிறது. அதற்கு வித்திட்டவர்  மறைந்த அஸ்ரப் அவர்கள் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் கடுமையான உழைப்பில் முஸ்லீம் காங்கிறஸ் என்ற கட்சி கிழக்கிலே உருவாகியது. இந்த கட்சியின் உருவாக்கத்துக்கு தேவை கருதி காலத்துக்கு காலம் ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும், தமிழ் அரசியல் போக்கினால் தலைவர் அஸ்ரப் கவரப்பட்டதும், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியில் இருந்தே முஸ்லீம்களின் அரசியல் தலைமை உருவாகவேண்டும், (காரணம் மற்றோருக்கு இப்பகுதி மக்கள் பிரச்சினையின் ஆழ அகலம் தெரியாது. ஆகவே  இவர்களால் அவர்களை பிரதி நிதித்துவம் செய்வது பொருந்தாது) என்ற  இரண்டு விடயங்கள் முக்கியமானவையாகும்.
இருந்த போதிலும்  தமிழ் அரசியலின் எதிர்கால போக்கு எப்படி இருக்கும்,  பிற்கால அரசியலில் கிழக்கு தலைமை ஏனைய பிரதேச மக்களுக்கு எவ்வாறு ஏற்புடயதாகும், இலங்கையின் பெரும்பான்மை மக்களின் அரசியல் போக்கு எப்படி அமையும், இத்தகைய நிலைமைகளில் பிராந்திய, சர்வதேச அரசியலுக்கு இலங்கை எவ்வாறு முகம் கொடுக்கும்    என்ற விடயங்களில் போதிய தூர நோக்கு இன்மையினால் தன்னை முஸ்லீம்களின் அரசியல் மீட்பாளராக(Messiah), பிம்பமிட்டு செயற்பட்ட அஸ்ரப் அவர்கள் பிற்பட்ட காலத்தில் யதார்த்த அரசியல்(pragmetic) தெளிவுபெற்று சில பல மாற்றங்களுக்காக எடுத்த முன்நகர்வுகளை முற்றாக முடிக்க முன்பே அவரின் வாழ்க்கை முடிவை எட்டியது(இன்னா லில்லாஹி வ இன்னாயிலாஹி ராஜுவூன்).
மக்களின் அரசியல் அறியாமையை மூலதனமாக்கி சந்தர்ப்பவாத அரசியலை வெற்றிகரமாகச் செய்து, இதுவே இலங்கை முஸ்லீம்களின் சாணக்கிய அரசியலாக, அதிக பட்ச அரசியல் அடைவாகக் காட்டி இதுவரை காலமும் இந்த கட்சி எப்படியோ காலத்தை கடத்தி விட்டது. ஆனால் முஸ்லீம்களுக்கு அரசியல் தெளிவு மெது மெதுவாகவேனும் வரும் நிலையில் பழையவர்கள் தமது பிடியை முஸ்லீம்கள் மீது தொடர்ந்து வைத்திருக்க முடியாமல் தட்டித் தடுமாறும் போது,  அந்த இடங்களை நிரப்ப புதியவர்கள் அதே பழைய உக்திகளோடு வந்து அரசியல் தெளிவில்லாத மக்களை தமக்கான, தமது கட்சிக்கான இலவச மூலதனமாக பாவிக்க முயற்சிக்கின்றனர்.
Image result for NFGG Party
“முஸ்லீம்”  என்ற “அடையாள சின்னம்” (logo) த்தை வெளிப்படையாகவோ அல்லது மறைத்து வைத்தோ “முஸ்லீம்” அரசியல் செய்ய பயணித்த கட்சிகள்; முஸ்லிம் சோசலிச முன்னணி (பதியுதீன் மஹ்மூத்), ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிறஸ்(SLMC), தேசிய ஐக்கிய முன்னணி(NUA), அகில இலங்கை முஸ்லீம்/மக்கள் காங்கிரஸ்(ACMC), தேசிய காங்கிறஸ், உலமா கட்சி, தூய முஸ்லீம் காங்கிறஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு(ஹசனலி) ,  என்று காலத்துக்கு காலம் புது புது முகமூடிகளுடன் வந்த  கட்சிகளின் வரிசையில் இப்போது முண்டியடித்து கொண்டு முன்னுக்கு வர துடிக்கும் கட்சிதான் முன்னாள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG), இந்நாள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG).
இவர்கள் அனைவரும் சொல்லும் விடயம்தான் மக்களை முதன்மை படுத்திய ஒரு “முன் மாதிரி” அல்லது “தூய்மை” அரசியலை நடத்த அமைக்கப்பட்ட கட்சி என்பது.
ஸ்ரீ.மு.கா இதே விடயத்தை ஓரு படி மேலே சென்று சொல்லிய அம்சம்தான்  அக்கட்சியின் யாப்பு “குர்-ஆன், ஹதீஸ்” அடிப்படை கொண்டதென்ற பிரகடனம்.  இந்த குர்-ஆன், ஹதீஸ் என்ற பதப் பிரயோகங்களினால் ஏற்பட்ட பயம் கலந்த பக்தி  விளக்கம் குறைவான (அச்சமூட்டி எச்சரிக்கை மாத்திரம் செய்யப்பட்ட) மக்களிடம்  நன்றாக விற்பனையான பண்டம் என்பதும் யாவரும் அறிந்ததே.
Image may contain: 5 people, people standing and outdoor
ஆகவேதான் அக்கட்சியின் ஆவேச உறுப்பினர்கள் ( சால்வைப் போராளிகள்) போகும் இடமெல்லாம் காரணம் என்னவென்று தெரியாது கழுத்தை சுற்றிபோடும் சால்வையோடு “அல்லாஹூ அக்பர்” என்ற உயர்ந்த நாமத்தை மலின படுத்துவதும் ஒரு வியாபார உக்தி என்றால் அதுவும் மிகையாகாது.
இதே வியாபார உக்தியை வேறுவிதமாக கையாள முயற்சிப்பவர்களே இந்த NFGG கட்சியினர். இந்த கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற நாமத்துக்குள் குறிவைக்கப்பட்டவர்கள் (Target group) முஸ்லீம்களே அல்லாமல் நல்லாட்சியை விரும்பும் ஒட்டுமொத்த நாட்டினங்கள் அல்ல.  பெயரளவில் ஆங்காங்கு தாவினாலும் செயற்பாட்டளவில் இவர்கள் கூறும் ‘இஸ்லாமிய அடிப்படையிலான’ ஆட்சியை ஏனைய சமூகம் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்பதே போதுமான சான்றாக இருக்க இந்த அமைப்பு முழுக்கவும் ஜமாத்தே இஸ்லாமியின் அரசியல் சிறகாகப் பறந்து கொண்டிருப்பது இதன் நிராகரிப்புக்கு வலுவூட்டும் மேலதிக காரணியாகும்.
தாம் உருவான காத்தான்குடியில் நிலையான இடத்தைப் பிடிக்க முன்பதாக தம்மை ஒரு தேசியக் கட்சியாக உருவாக்க இக்கட்சி நாடிய குறுக்குவழிகள் அரசியலுக்காக சாணக்கியமாகப் போற்றப்பட்டாலும் அடிப்படையில் அவர்கள் பேசும் இஸ்லாமிய வழிக்கு முரணானதாகும்.
நேரடி போட்டிகளால் வெல்ல முடியாத இடங்களில் குறுக்கு வழியில் ‘ஒப்பந்தங்கள்’ மூலம் சலுகை ஆசனங்களைப் பெறுவதைக் குறியாகக் கொண்டு கடந்த தேர்தல் வரை இக்கட்சி பெருந்தொகைப் பணம் செலவு செய்து செய்த முயற்சிகளில், தேவையிருக்கின்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் ஒருவரை இனாமாக இணைத்து அழகு பார்த்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.’
எனினும், இதே குறுக்கு வழியால் ஊவா மாகாண சபையிலோ பின் வந்த பொதுத் தேர்தலில் 17 மில்லியன் ரூபா செலவு செய்து கூட இக்கட்சியால் அதனை சாதிக்க முடியாத நிலையில் இம்முறை தேர்தலில் வெற்றி தோல்விக் அப்பால் ‘உள்ளோம்’ ஐயா எனும் அரசியல் இலாப அடிப்படையிலான கேலிக்கூத்தை இஸ்லாமிய அரசியல் கலாச்சாரமாக இக்கட்சி சித்தரிக்கிறது.
கடந்த பொது தேர்தலில் புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் புத்தளம் தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகளை பெற வேண்டிய நிலையில்  மக்கள் நலனில் அக்கறை கொண்டு திடீரென்று வானத்தில் இருந்து  விழுந்த ஒட்டகக் குழு (PPAF) சுமார் 9,000 வாக்குகளை விழுங்கிக் கொண்டதால் புத்தளம் தொகுதி அடைந்த நட்டம் மேலதிக வரலாற்றுச் சான்றாகும்.
தேர்தல் காலம் வரை பேசப்படும் இஸ்லாமும், அவர்களே சுட்காட்டும் மற்றோரின் இஸ்லாமிய முரண்பாட்டு அரசியலும் இவர்கள் கூட்டணியமைத்தால் சுயநலம் கருதி மறக்கப்படுவதை கடந்த பொதுத் தேர்தலில் ரவுப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டு மூலம் எடுத்தியம்பு வரலாற்றுக்கு இரண்டே வயதுதான். எனவே, அதை அத்தனை இலகுவில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
போதாதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதாவது ஸ்ரீ லங்கா அரசியலை பொறுத்தவரை தேசிய ரீதியில் அனைத்து மக்களுக்காகவும் செயல்படும் பெரிய கட்சிகளின் தயவு இல்லாமல் எந்த கட்சியும் உயிர்வாழ முடியாதென்ற அடிப்படை விடயத்தை மறைத்து ஒப்பந்தங்களுக்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கும் கயமைதனம் ஏனைய முஸ்லீம் கட்சிகளுக்கு போன்று இந்த NFGG கும் பொதுவானதே. ஆனால் அப்படி அல்ல என்ற அவர்களின் குதர்க்கம் தான் சகித்துக் கொள்ள முடியாத அம்சமாக இருக்கின்றது.
இக்கட்சி பயன்படுத்தும் மாயப் பிரக்ஞைகளுள் ஒன்றான சுழற்சி முறை பிரதிநிதித்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த முதலாவது வாய்ப்பிலேயே கோட்டை விட்டு பதவியெனும் கதிரையில் அமர்ந்த பின்னர் அயுப் அஸ்மின்களும் மிகச்சாதாரண அரசியல்வாதிகளேயன்றி அங்கு இஸ்லாமிய மாயை வலுவற்றது எனவும் நிரூபித்துள்ளார்கள்.
இதனடிப்படையில் இக்கட்சியில் உள்ள எந்த அஸ்மின்களும் இருக்கைகளைக் கைவிட்டு எழுந்தோடும் மன வல்லமை படைத்தவர்களோ அல்லது இருந்தவர்களைத் தூக்கியெறியவோ திடமான நடவடிக்கையெடுக்கவோ இக்கட்சிக்கு வலுவிருக்கிறது எனவோ யாராலும் இனியும் நம்ப முடியாது.
நஜா முஹம்மத் தமது கட்டுப்பாட்டை மீறி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்தார் என ‘பெயர் குறிப்பிடாமல்’ அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவராக ஒரு காலத்தில் ஜமாத்தே இஸ்லாமிக்குள் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் காலம் அதனை துகிலுரித்தது. அவ்வாறு அவர் நீக்கப்படவும் – சேர்க்கப்படவும் இல்லையென நாங்கள் நம்புகிறோம், இல்லை விலக்கிப் பின் சேர்த்தோம் என்று சொன்னாலும் அதற்கான நியாயங்களை பகிரங்கப்படுத்த முடியாத மறைமுக அமைப்பின் பின்புலம் உள்ளதால் இந்த அஸ்மின்களுக்கும் கட்சிக்கும் இடையிலான உறவின் எதிர்காலமும் இந்த வழியிலேயே இருக்கும்.
பதவியாசைக்கப்பாற்பட்டவர்களாகத் தம்மை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பில் அடிமை அரசியல் செய்த கட்சியில் எதிர்காலத்தில் அதை மாற்றும் எந்த மாற்றமும் இல்லையெனும் நிலையே இங்கு அவதானிக்கப்படுகிறது.
ஆகவே இந்த கட்சியால் என்றுமே உத்தரவாதம் அளிக்கமுடியாத விடயத்தை கொண்டு முஸ்லீம்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் முயற்சி எதற்காக? ஆக கட்சிக்கான பெயர் எவ்வளவுதான் கவர்ச்சிகரமானதாக இருப்பினும், இலங்கை அரசியலைப் பொறுத்தவரை தேசிய ரீதியில் அனைத்து இனங்களையும் பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் எல்லா பிரஜைகளுக்காகவும் குரல் கொடுக்கும் சிறிய கட்சிகளுக்கே ஒரு எல்லைக்கு மேல் செயல்பட முடியாமல் இருக்கும் போது முஸ்லீம்களை மாத்திரம் குறிவைத்து செயல்படும் NFGG போன்ற உதிரி கட்சிகள் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?
கூடவே இக் கட்சின் ஸ்தாபக, அதி உயர்மட்ட உறுப்பினரான பொறியியலாளர் ரஹ்மான அவர்களினதும்,  கட்சியின் தேசிய செயலர்/அமைப்பாளர்  நஜா முஹம்மதின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இவர்கள் முஸ்லீம் சமூகத்தை மீள முடியாத ஒரு ஆபத்துக்குள் தள்ளிவிடுவார்கள் போல் தெரிகின்றது.    காரணம் நம் முன்னால் உள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இணைத்து கொண்டு வரும் போது  நமக்கான விடையாக இறுதியில் கிடைப்பது “NFGG=ஸ்ரீலங்கா ஜமாத்-ஏ- இஸ்லாமி”  என்ற ஒரு எளிய சமன்பாடே. இதை விளங்க பின்வரும் விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். (ஜமாத்-ஏ-இஸ்லாமின் ஆபத்தான ரகசிய அரசியல்  தேவை வரும் போது மக்கள் முன் கொண்டுவரப்படும்.)
1. NFGG கடந்த பொது தேர்தலை சந்திக்க முன்பே NFGG கொள்கைகள், அதன் ஆழ்ந்த தத்துவங்கள்(?), எதிர்கால அடைவுகள் அதன் மூலம்  முஸ்லீம் சமூகம் எவ்வாறான முன்மாதிரி சமூகமாக மாறும் என்பதை எல்லாம் கிலாசித்தும் மற்றைய முஸ்லீம் கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்ட கட்சிகள் எல்லாம் கூஜா தூக்கும் கட்சிகளே அல்லாமல் சமூகத்துக்கும், நாட்டுக்கும் உதவாதென்று  ஜாமாத்தின் (அதிபதி/அக்பர்) திரு. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழில் ஒரு கட்டுரை எழுத, அதே ஜமாத்தை சேர்ந்த வைத்தியர் ரிபாய் அவர்கள் அந்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மட்டுமில்லாமல் இந்த நூற்றாண்டின் புலமைத்துவம் மிகுந்த (intelectually mindblowing) ஒரு ஆக்கம் என்ற தனது சான்றிதழ் ஒன்றையும்  வழங்கத்தவரவில்லை. இதை சாதாரண ஊர் பாஷையில் சொல்வதானால், “ஆளுக்கு ஆள் முதுகு சொறிதல்” என்ற பதப்பிரயோகத்துக்குள் அடக்கலாம்.
2. NFGG யின் முக்கிய உறுப்பினர்களைப் பார்த்தால் அவர்கள் ஒன்றில் ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர்கள், மாதம்பை (பிராந்திய கிலாபா தலைநகர்) என்ற சிறு நகரத்தில் இயங்கும் இஸ்லாஹியாவில்  கற்று முடித்து  வெளியேறியவர்கள் அல்லது நேரடியாக ஜாமாத்-ஏ-இஸ்லாமி இயக்கத்தின் உறுப்பினர்/ஆதரவாளர்கள் அல்லது ஜாமாத்தின் ஏனைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டோர். நாஜா முஹம்மத் இஸ்லாஹியா பழைய மாணவர் என்பதும், இம்முறை புத்தளத்துக்கான நகரசபை தேர்தலில் இக்கட்சி சார்பாகா போட்டியிடும் முன்னணி வேட்பாளராக முன்னர் அறிவிக்கப்பட்ட வைத்தியர் ரிபாத் ஜாமாத்தின் சொத்தான “Kuwait Hospital” லின் பிரதான வைத்தியருமாவார்.(புத்தளம் நகர சபை தேர்தலில் வைத்தியர் ரிபாத் சம்பந்தமான விடயம் இக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தரப்படும்)
கடந்த வருடம் இக்கட்சியின் ஸ்தாபகர் ரஹ்மான் அவர்கள் லண்டனுக்கு வருகைதந்த நேரம் சோனகர் டொட் கொம்மின் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலும் நானுமாக சிறிய ஒரு இராப்போசனத்துக்காக ரஹ்மான அவர்களுடன் ஒன்று கூடிய போது பலதும் பத்துமாக பேசப்பட்ட விடயங்களில் கட்சிக்கும்( நாஜா முஹம்மத்துக்கும்) ஜாமாத்துக்கும் உள்ள உறவு என்ற விடயமும் ஒன்றாகும்.
அதற்கான காரணம் சோனகர் டொட் கொம்மின் பூரண அனுசரணையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் நாடு கடந்தோர் அமைப்பு( Sri Lanka Muslim diaspora initiative) பின் ஏற்பாட்டில் 5 மே. 2014ல் லண்டனில் நடத்தப்பட்ட BBS க்கு எதிரான முதல் எதிப்பு ஆர்பாட்டத்தை தமது சுய இலாபங்களுக்காக தூதரகத்துடன் இணைந்து தடுக்க  முயன்று ஜமாத்தே இஸ்லாமி தோல்வி கண்டது.
இதன் போது இவர்கள் பேசும் பசப்பு இஸ்லாத்தையும் மீறி தனி நபர் தாக்குதல்கள், புறம் மற்றும் வதந்தி பரப்பியமை உட்பட மிகக் கேவலமான அரசியலையெல்லாம் செய்து ஆர்ப்பாட்ட நாளன்று தாமாகவே அச்சம் கொண்டு தமது வீடுகளுக்குள் இந்த ஜமாத்தின் யு.கே குழு முடங்கிக் கிடந்தது.
அதன் முன்னை நாள் லண்டன் பிரதிநிதி (நஜா முஹம்மத்)   ஜமாத்தை விட்டு விலகிவிட்டாரா அல்லது ஜமாத்தின் நேரடி கண்கானிப்பில் இந்த கட்சி இயங்குகிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது ரஹ்மானிடம் இருந்து தெளிவான விளக்கத்தைத் பெறமுடியாதிருந்தது என்பதும், விளக்கம் தருவதைத் தவிர்க்க ரஹ்மான் படாத பாடு பட்டார் என்பதும் இன்னுமொரு விடயம்..
அதே நேரத்தில்  நாம் ஜமாத்திற்கு விட்ட கோரிக்கை, அதாவது நஜா முஹம்மத் அவர்கள் ஜமாத்தில் இருந்து வெளியேறிவிட்டாரா அல்லது ஜமாத்தின் அனுமதியின்றி அரசியலில் குதித்துள்ளார் என்பதால் ஜமாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாரா என்ற பகிரங்கமான அறிக்கை ஒன்றை மக்கள் நலன் கருதி வெளியிட வேண்டும் என்ற அம்சத்தை சத்தமில்லாமல் தூக்கத்தில் போட்டுள்ளன இந்த கட்சியும் ஜமாத்தும். ஏன்  நஜா முஹம்மத் கூட தனிப்பட்ட முறையில் இது குறித்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இப்போதும் நஜா அதே ஜமாத்தின் ஊழியரே, முடிந்தால் மறுக்கலாம்!
இங்கே எந்த ஜமாத்தும் அரசியல் செய்ய கூடாததென்ற கட்டுப்பாடில்லை. ஆனால் அதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்தல் என்பது பொதுமக்களுக்கு இருக்கும் தகவல் அறியும் உரிமையின் பால்பட்டது, என்பதோடு அப்படி வெளிப்படையாக அறியத் தந்தால் இப்படியான சமய அமைப்புக்கள் அரசியலில் இறங்கி இருக்கும் பிரச்சினைகளை  எப்படி இன்னும் கூட்டிச் செல்லும் என்பதை மக்களின் தீர்வுக்கும் விடும் முகமாக தகவல்கள் வழங்கும் தார்மீக பொறுப்பு எமக்கு இருக்கின்றது. ஆகவே இங்கு மூடிமறைத்து அல்லது மக்களை இருக்குள் வைத்து அரசியல் செய்ய யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதை தெரிந்து கொண்டு செய்வது ஒரு சமூக அநீதி.
நஜா முஹம்மத் அவர்கள் ஜாமாத்தினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டாரா அல்லது தானே சுய விருப்பில் நாட்டுக்கு திரும்பினாரா அல்லது நாடு கடத்தப்பட்டாரா என்ற விடயம் தொடர்பாக எம்மிடம் உள்ள தகவல்களை வெளியிடுவது தனிமனித தாக்குதலாகும் என்பதோடு நாம் எமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகம் தொடர்பான கரிசனையில் இந்த கட்டுரையை வரைவதால் சம்பந்தப்பட்ட விடயத்தை மாத்திரமே மக்கள் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் நாஜா முஹம்மது என்ற தனி மனிதனை விட்டுவிட்டு அவரின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு, தற்போது அவர் சார்ந்த கட்சி தொடர்பான விடயங்களில் மாத்திரம் நாம் கரிசனை செலுத்த வேண்டியுள்ளது.
இந்த வகையில்  நஜா முஹம்மத் ஸ்ரீலங்காவின் அனேக கட்சிகளுடடான உடன்படிக்கைகளில் கைச்சாதிட்டுள்ள விடயம் அனேகர் அறிந்ததே. இவர் தமிழர் தேசிய கூட்டணியுடன் (TNA) செய்து கொண்ட ஒப்பந்ததில் என்னென்ன அம்சங்கள் சமூக நலன் கருதி செய்யப்பட்டன என்பதை அறிவது வாக்காளர்களின் உரிமை. அந்த அடிப்படியில் இதனோடு சம்பந்தம்படும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.
லண்டனில் நடைபெற்ற  தமிழ் சகோதர்களின் அரசியல் நிகழ்வு ஒன்றின் பேச்சாளர்களில் நானும், நஜா முஹம்மதும் கந்து கொண்டதாக ஒரு நினைவு. ஒரு வேளை நான் வெறும் பார்வையாளராகத்தான் கலந்து கொண்டேனோ என்பது நினைவில்லை. எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் நிகழ்வுகளில்  நான் கலந்து கொள்ளும் போது  எம்மை  “சோனகர்” என்ற பெயருடன் கூடிய ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்காதவரை தமிழர் அரசியலுடனான எந்த உடன்பாடும், ஒப்பந்தமும் பயந்தராது என்பதை சொல்ல, அதற்கான நியாயங்களை விளக்க பின்நிற்பதில்லை, என்பதோடு 1990ல் முஸ்லீம்கள் வடக்கில் இருந்து துரத்தப்பட்ட சம்பவத்துக்கு புலிகள் சார்பாக அவர்களின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்க்கம் மன்னிப்பு கேட்டாலும் புலித்தலைவர் பிரகாரனின் நேரடி மன்னிப்பே பெறுமதியானது,
முஸ்லிம்-தமிழ் உறவை சீக்கிரம் கடியெழுப்ப உதவும்  என்ற விடயங்களை  புலிகளின் பத்திரிகையில், வானொலியில், தமிழரின் தொலைக்காட்சி என்ற எந்த ஊடகத்திலும் சொல்ல பின்நின்றதில்லை.  ஆனால் அந்த குறிப்பிட்ட மேடையில் பேசிய நஜா முஹம்மத் “முஸ்லீம்களின் உரிமையில் தமிழர் கைவைத்தால் போராட்டம் வெடிக்கும் என்றார்”,  கூடியிருந்தோரில் சிலர் என் முகத்தை பார்த்ததும், நான் ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்த்த  கண்னையும் தோளையும் உயர்த்திக் காட்டியதும் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தமிழர் அரசியல் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தில் எம்மை உள்வாங்கிக்கொள்ளும் ஆபத்து என்றும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் தனித்தவர்கள், நாம் முஸ்லீம்கள் ஆகவே தமிழரில் இருந்து வேறுபட்டவர்கள் என்று எவ்வளவு கூக்குரல் எழுப்பினும் அவர்களிடம் உள்ள வாதம்
என்னவென்றால் தமிழ்மொழி பேசுவோரில் சைவர், கத்தோலிக்கர்(எனைய கிறிஸ்தவ பிரிவினரும்) இருப்பது போலவே முஸ்லீம்களும் ஒரு சமய பிரிவினர். ஆகவே சைவரும், கதோலிக்கரும் தமது சமய அடையாளங்களுடன் தமிழர் என்ற மொழி வரையறைக்குள்  வரும்போது இவர்கள் மாத்திரம் முஸ்லீம் என்ற சமய அடையாளத்தை வைத்து பிரிந்து செல்கின்றனர். அது அனுமதிக்க முடியாது என்றால் இதற்கு தர்க்க ரீதியில் NFGG யிடம் அல்லது நஜா முஹம்மதிடம் என்ன மாற்றுதிட்டம் உள்ளது?
இதை இன்னும் சற்று மேலும் விபரித்தால் நஜா முஹம்மத் அவர்கள் இன்னும் சில தனிப்பட்ட (தங்களை புத்திஜீவிகளாக கருதும்)
நபர்களுடன் சேர்ந்து புலிகளுக்கும்- ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் (2000 ஆண்டுகளில்) நோர்வேயில்  நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்கள் தனித்தரப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்யுமாறு லண்டனில் உள்ள நோர்வே தூதுவராலயத்தில் மஹஜர் ஒன்று கொடுத்தார்கள். ஆனாலும் தமிழ் தரப்பினரால் நோர்வேயிக்கு சொல்லப்பட்ட சேதி,  முஸ்லீம்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில் பிரச்சினை இல்லை, ஆனால் அவர்கள் தனித்தரப்பாக இல்லாமல் அரசாங்கத்தின் பக்கத்தில் அமரலாம் என்றார்கள், நோர்வையும் ஆம் என்று தலையாட்டியது.
 இந்த “முஸ்லிம்” அடையாளத்தின் பிரயோசனமில்லா கோசத்தை சுட்டிக் காட்டி, சோனக அடையாளத்தின் முக்கியத்துவத்துவத்தை நியாப்படுத்தி நாம் செய்த பிரசாரத்திற்கு  நஜா முஹம்மத் உட்பட அந்த புத்திஜீவிகளால் இன்னும் விடையளிக்க முடியாமல் இருக்கின்றது. லண்டன் நேர்வே தூரவராலயதின் முன்னால் யாழ் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட ஆர்பாட்டம், அந்த நேரத்தில் நாஜா முஹம்மதும், அவர் நண்பர்களும் மஹஜர் கையளித்த பின்னான் என்னுடனான சிறு பேட்டி, அந்த ஆர்பாட்டகாரர்களுக்கு  சோனகர் அடையாளம் அரசியல் ரீதியில் ஏன் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற எனது நேரடி விளக்கம் என்ற அம்சங்கள் அடங்கிய கானொளி சோனகர் டொட் கொம் களஞ்சியதில் பாதுகாக்கப்படுகின்றது.
இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இந்த அரசியல் கட்சிக்கு  இன அடையாளம் தொடர்பான எந்த ஞானமும் இல்லை என்பதும் அவை இல்லாததால் இந்த கட்சி சரியான கொள்கைளை வகுத்துக் கொள்ள முடியாதுள்ளது என்பதும், ஆகவே எதிர்காலத்தில் இந்த கட்சி முஸ்லீம்களுக்கு ஒரு சுமையாக இருக்கும் என்பதற்கான ஒரு கட்டியம் கூறுவதற்காகவுமே.  நஜா முஹம்மது லண்டனில் செய்த இந்த போர்ப்பிரகடனம் ஏன் அவர் இலங்கையில் இருந்த போது, 1990ல்  புலிகள் முஸ்லீம்களை பலாத்காரமாக வெளியேற்றியபோது  செய்யவில்லை. BBS க்கு எதிராக செய்யப்படவில்லை? ஏன் சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தம் இல்லாமல் போர்பிரகடனம் செய்தார். ஒரு சமூகம் சார்பாக போர் முரசு கொட்ட இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்? ஜாமாத்-ஏ-இஸ்லாமி என்ற இயக்கத்தின் லண்டன் பிரதிநிதியாக செயல்பட்டார் என்பது இவர் ஒட்டு மொத்த ஸ்ரீ லங்கா முஸ்லீம்களினது அரசியல் பிரதிநிதி என்ற அர்த்தமா?  அத்துடன் BBS க்கு எதிராக லண்டனில் செய்யப்பட்ட முதல் ஆர்பாட்டத்தில் இவர் பிரதி நிதித்துவப்படுத்திய ஜமாத்-ஏ- இஸ்லாமி ஏன் சின்னத்தனமாக நடந்து கொண்டது என்பதையாவது நஜா முஹம்மது தெளிவு படுத்துவாரா?
இதே போல் இங்கே NFGG யின் தலைவர் ரஹ்மான் அவர்களின் சொந்த கல்வி நிறுவனமான BCAS பற்றி கதைக்க வேண்டிய தேவையும் இப்போது எழுகின்றது.  இந்த கல்வி நிறுவனம் தலைவரின் தனிப்பட்ட வாழ்வாதார ஏற்பாடு என்றாலும்  தலைவரின் தனிப்பட்ட நலன்களுக்கும் கட்சி நலங்களுக்கும் இடையே முரண்பாடுகள் (confrlict of interest) ஏற்பட இதில் சாத்தியமுள்ளன என்ற அம்சம் இங்கே முக்கியம் பெறுவதால் நஜா முஹம்மதின் தனிப்பட்ட லண்டன் வாழ்க்கையை விட இது வேறு பரிமாணத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இப்போது விமர்சனத்துக்குள்ளாகின்றது.
இந்த அடிப்படையில்  அஸ்ரப் அவர்களின் முயற்சியில் ஸ்தாபிக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக் கழகத்தில் கற்கை நெறிகளை முடித்து வெளியேறுவோர் ஒப்பிட்டு ரீதியில் திறமை குறைந்தவர்களாக் கூறும் ரஹ்மான் போதிய புள்ளிகள் இல்லாததால் இலங்கை பல்கழைக் களகங்கள் எதற்கும் தெரிவாக முடியாத மாணவர்களுக்கு மலிவான விலையில் வெளி நாட்டு கல்வி தகுதி பெற்றுக் கொடுக்கும் ரீதியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக் கழகங்களில் அவர்களை சேர்ப்பது BCAS கல்வி நிறுவனத்தின் ஒரு அம்சமாகும். இருந்தும் இருபக்க உடன்பாடுடன்  தனது சொந்த வருமானத்துக்கு கல்வி சேவை ஒன்றை நடத்துவது கண்டனத்துக் குறியதல்ல, ஆனால் எமது ஆய்வுகளின் படி வெளிநாட்டு பல்கலைக் கழக அனுமதிகள் பெற்றுக் கொள்ள அரசியல் செல்வாக்கும் தேவைப்படுவதால் சொந்த நலனுக்கான BCAS  சையும் சமூக நலன் என்ற பெயரில்  அரசியல் கட்சி ஒன்றையும் வைத்து முன்னையதற்கு பின்னயதின் உதவியை பெறுதல் என்ற செயற்பாடு நலன்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கின்றது. இது (உண்மையானால்) சமூக நலன் சொந்த நலத்திடம் சரணடைகின்றது என்பதற்கு தெளிவான அத்தாட்சியாகின்றது.   அது அனுமதிக்க முடியாதவிடயம். ஆகவே இங்கு ஏற்பட்டுள்ள நலன்களுக்கிடையிலான முரண்பாட்டை நிவர்த்திக்க தவைவர் ரஹ்மான அவர்களுக்குள்ள தெரிவுகள் இரண்டு:
1. தனது கல்வி நிறுவனத்தை தொடர்ந்து நடத்தும்முகமாக கட்சியை கைவிடல்.
2. சமூக நலம்தான் தலைவரின் உயிர் மூச்சு எனில் தன் கல்வி நிறுவனத்தை கைவிடல்.
ஆனால் இன்றைய, எதிர்கால ஸ்ரீ லங்கா முஸ்லீம்களின் அமைதியான இருப்புக்கும், தொடர்சியான முன்னேற்றத்திற்கும் வழி சமைக்கும் முகமாக நாம் பரிந்துரைக்கும் முன்றாம் தேர்வு கல்வி நிறுவனத்தையும், கட்சியையும் துறந்து ஸ்ரீ லங்காவின் தேசிய கட்சிகள் ஒன்றில் சேர்ந்து ஒட்டு மொத்த சமூக நலனுக்காக தன்னை அர்பணிப்பது.
இவை நடக்காத வரை  NFGG என்பது பத்துடன் பதினொன்றே அல்லாமல் இது முஸ்லீம் சமூகத்தை மீட்பர்களின் கூட்டல்ல, ஸ்ரீ லங்காவின் ஐக்கியத்தில், செளஜன்யத்தில், பொருளாதார வளர்சியில், கல்வி முன்னேற்றத்தில் ஒரு அணுவையும் அசைக்க முடியாத ஒரு வெற்றுக் கூட்டே இது.
முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்

I

Leave a Reply

Your email address will not be published.