Education today : “உலகின் ஐம் பெரும், “பெரும் கடல்கள்”..!! பூமியின் பரப்பில் 70 வீதத்தை கடல்களே ஆக்கிரமித்துள்ளன

· · 879 Views

– துவாரகி சுந்தரமூர்த்தி –

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் யூன் 8 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசிலின் றியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் முதன் முறையாக கனடா இந்த நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.

ring8201_c0-252-3824-2481_s885x516

ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தநிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று தொடக்கம் உலகளாவிய ரீதியில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு வருடாந்தம் அனுசரிக்கப்படுகின்றது.

பூமியின் பெரும்பகுதியை வியாபித்துள்ள கடல், பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல், பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாகப் பொழிந்து செழிக்கச் செய்கின்றது.

பூமியில் நாம் வாழ கடல் பெரும்பங்கு வகிக்கின்றது. கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது.

கடல், ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும், ஒட்சிசன் உற்பத்தி செய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களை வழங்குகின்றது. மற்றும் காலநிலை மாற்றங்களைச் சீராக்குகின்றது. சில சமூகத்தினரின் வாழ்வாதாரம் கடலைச் சார்ந்தே அமைந்துள்ளது.

கடல் 

உலகப் பெருங்கடல் அல்லது வெறுமனே பெருங்கடல் என்பது புவியின் பரப்பில் 70 வீதத்தை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட இணைந்த நீர்நிலை ஆகும்.

இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர்சுழற்சி, கரிமச் சுழற்சி, நைதரசன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகின்றது.

ஆதிகாலத்திலிருந்து கடலில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆய்வுகளும் செய்யப்பட்டன. அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768 – 1779 காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்துதான் ஆரம்பமாகின்றது.

கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ‘கடல்’ என்ற சொல்லானது, கடத்தற்கு அரியதென்று பொருள்படும். ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கல்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பலதனிமங்களும் உள்ளன.

இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை இடத்திற்கேற்றாற்போல் வெகுவாக வேறுபடுகின்றது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் ஆழ்கடல் பகுதியிலும் உவர்த் தன்மை குறைவாகக் காணப்படுகின்றது.

எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் ‘ஒப்புமை’ வீதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடற்பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன.

இவை ஆழம் குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும் ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன.

ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்கற்களால் ஏற்படுகின்றன.

வைரசுகள், பக்டீரியாக்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெருமளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன.

இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன.

குறுக்குக் கோடு வாக்கில் கடலின் தன்மையும் மாறுகின்றது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன. மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும்.

கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகின்றது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடற்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன.

வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம், போர், ஓய்வுநேரச் செயற்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு, பாய்மரப் பயணம், கருவி உதவியுடன் குதித்தல், போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகின்றது.

மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் ஒடிசி போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கின்றது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது.

கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடன் இணைந்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் ‘பெருங்கடல்கள்’ என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்.

‘கடல்’ எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை.

கடலின் இயற்பியல்

சூரியக் குடும்பத்தில் நீர்ம நிலையில் (திரவ நிலை) புறப்பரப்பில் நீரைக் கொண்டுள்ள ஒரே கோள் புவியே ஆகும். ஆனால், சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள புவியை ஒத்த கோள்களில் பெருங்கடல்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.

புவியின் புறப்பரப்பின் 70 விழுக்காட்டிற்கும் மேலாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் 97.2 விழுக்காடு நீரானது கடலிலேயே காணப்படுகின்றது. இது கிட்டத்தட்ட 1,360,000,000 கன கிலோமீற்றர்கள் (330,000,000 cu mi) என்ற அளவுக்குச் சமம். மீதி 2.15 விழுக்காடு நீரானது பனியாறுகளிலும், கடல் மேல் உறைந்த பனிக்கட்டியிலும் அடங்கியுள்ளது. 0.65 விழுக்காடு நீரானது நீராவி, பிற நன்னீர் ஏரிகள்ஆறுகள்நிலத்தடி நீர் மற்றும் காற்றிலும் உள்ளது.

விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது கோள் நீல நிற கோலி போன்று காட்சியளிக்கும். அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் நமது புவியில் கடலே ஓர் ஆதிக்கமான அம்சமாக இருப்பதால் “புவி (Earth)” என்று அழைப்பதற்கு பதில் “பெருங்கடல் (Ocean)” என்று இதனை அழைக்கலாம் என்று கூறினார்.

பெருங்கடல் இயற்பியல் (Physical Oceanography) அல்லது கடல் இயற்பியல், என்பது கடலின் புறவியல் (இயற்பியல்) பண்புகளான வெப்பநிலை – உவர்ப்புத் தன்மை கட்டமைப்பு, கலப்பு, அலைகள், உள்ளக அலைகள், புறப்பரப்பு ஓதங்கள். உள்ளக ஓதங்கள், சுழற்சிகள் ஆகியவற்றைப் பற்றிய கற்கை ஆகும்.

சுழற்சிகள் (currents), ஓதங்கள், அலைகள் வடிவிலான நீரின் இயக்கமானது கடற்கரையோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது. கடலின் புவியியல் என்பது பெருங்கடல் வடிகால்களின் வடிவத்தையும் அவற்றின் நீட்சியையும், மேலும் கடலில் முடியும் நிலப்பகுதியின் கரைகளையும் பற்றிய படிப்பாகும்.

கடல் படுகையின் வடிவமைப்பும் அதன் நீட்சியும் புவியிலுள்ள பொருட்கள் எதனால் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகின்றன. மேலும், இவற்றின் மூலம் கண்ட நகர்வுநிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள், எரிமலைப் பகுதிகளின் செயற்பாடுகள், படிவுப் பொருட்களின் மூலம் படிவுப் பாறைகள் உருவான விதம் ஆகியவற்றைப் பற்றி அறிய முடிகின்றது.

கடலிலுள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளால் உருகிய பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருட்களினால் உருவானது என்று எண்ணப்பட்டது. ஆனால், அண்மைய ஆய்வுகள் புவியின் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து வந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடல் நீரின் ஒரு முக்கியமான சிறப்பியல்பு அதன் உவர்ப்புத் தன்மை ஆகும். உவர்ப்புத் தன்மை பொதுவாக ஆயிரத்தில் இத்தனை பகுதிகள் (parts per thousand – இது ‰ குறி கொண்டோ “/ மில்லியன்” என்றோ குறிப்பிடப்படுகின்றது) என்று அளக்கப்படுகின்றது. ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லீட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35 ‰ என்று குறிப்பிடப்படுகின்றது. (பெருங்கடலின் 90% நீரானது 34% – 35% வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன).

நடுநிலக் கடல் சிறிது அதிகமாக 37% என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 வீதமாக உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கல்சியம் ஆகியவற்றின் உலோக அயன்களும், சல்ஃபைட், காபனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயன்களும் கரைந்துள்ளன.

பல்வேறு கடல்களில் வெவ்வேறு உவர்ப்புத் தன்மை காணப்பட்ட போதிலும் ஒப்புமை பங்கீட்டளவு உலகம் முழுதும் நிலையான ஒன்றாகவே உள்ளது. கடல் நீர் மனித சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலுள்ள அதிகப்படியான உப்பினை அவற்றால் சுத்திகரிப்பு செய்யமுடியாது.

ஆனால், எதிர்மறையாக நிலம் சூழப்பட்ட அதிஉவர் ஏரிகள் (hypersaline lakes) சிலவற்றில், உதாரணமாக சாக்கடல் ஆனது ஒரு லீட்டரில் 300 கிராம் கரைந்த திடப்பொருட்களைக் கொண்டுள்ளது. (அதாவது 300%)

மேற்பரப்பு நீரின் ஆவியாதல் வீதம் (உயர் வெப்பநிலை, காற்று வீசும் வீதம், அலை இயக்கத்தினால் அதிகரிக்கும்), வீழ்படிவாக்கும் திறன், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உட்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்நிலைகளின் கலப்பு ஆகியவற்றால் கடலின் உவர்த் தன்மை மாறுகின்றது.

எடுத்துக்காட்டாக, பால்டிக் கடலின் குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, அதிக ஆறுகளின் கலப்பு இவைமட்டுமன்றி, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் அடிக்கடி இக்கடலில் வந்து நிரம்புதல் போன்றவற்றால் இதன் அடி அடுக்கு அடர்வானதாகமாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் போகின்றது.

அதனால் மேல்மட்ட அடுக்கின் உவர்ப்புத் தன்மை 10 – 15ம% வரை மட்டுமே உள்ளது. மேலும் அதன் கழிமுகப் பகுதிகளில் இன்னும் குறைவானதாக காணப்படுகின்றது. வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும் ஆனால் குறைவான வீழ்படிவாதல் பண்பையும் பெற்றிருக்கின்றது; சில ஆறுகளும் அதனுள் கலக்கின்றன.

மேலும், ஆதாம் வளைகுடாவுடன் கலக்கும் பாப்-எல்-மாண்டெப் ஆனது மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதன் சராசரி உவர்ப்புத் தன்மை 40% என்ற அளவில் உள்ளது.

கடலின் வெப்பநிலை அதன் பரப்பில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் உச்சியில் சூரியன் இருக்கும்பொழுது அதன் வெப்பநிலை 30°C ஆக இருக்கும். ஆனால், துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை கடலிலுள்ள பனியுடன் ஒரு சமநிலையில் உள்ளது. அது எப்போதும் -2 °C என்ற அளவில் உள்ளது.

பெருங்கடல்களில் தொடர்ச்சியான ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது. வெதுவெதுப்பான பரப்பு நீரோட்டங்கள் வெப்பமண்டலத்தை விட்டு விலகுகையில் குளிர்கின்றன. குளிர்வதால் அந்நீரின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனால், அது கீழே செல்கின்றது. அந்தக் குளிர் நீர் ஆழக் கடல் நீரோட்டத்தின் காரணமாக மீண்டும் நிலநடுக்கோட்டினருகில் வருகின்றது. இந்த சுழற்சி முழுவதும் வெப்பநிலை அடர்த்தி மாற்றங்களால் நிகழ்கின்றது. உலகம் முழுவதும் அடி ஆழக்கடல் வெப்பநிலை -2 °C முதல் 5 °C வரை இருக்கலாம்.

அத்திலாந்திக் பெருங்கடல் 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப் பரப்பு 106.4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக 20 சதவிகிதம் ஆகும்.

இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்லையில் ஐரோப்பாவும், ஆபிரிக்காவும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும்.

தென்முனைப் பெருங்கடல்

அன்டார்டிக் நிலபரப்பைச் சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிப்பாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு 10 டிகிரி செல்சியஸ் முதல் -2 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகின்றது.

இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்து கொண்டிருக்கின்றது. மார்ச் மாதத்தில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 இலட்சம் சதுர கி.மீ ஆக இருக்கும். செப்டெம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 இலட்சம் சதுர கி.மீ ஆகின்றது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும்தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டில் சர்வதேச நீர்ப்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்டிக்காவுடன் இணைத்தது.

தற்போது இதன் மொத்த பரப்பளவு 2 கோடியே 3 இலட்சத்து 27 ஆயிரம் சதுர கி.மீ ஆகும். 4,000 – 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகின்றது.

இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கிலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

ஆர்டிக் பெருங்கடல்

ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்ட்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும்.

இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா – ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து – கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து – ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன.

ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

ஆர்ட்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புக்களும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக 10 அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகின்றது.

ஆர்ட்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதர பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகின்றது. 130 இலட்சம் சதுர கி.மீ. க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகின்றது.

இந்தியப் பெருங்கடல்

உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆபிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே அவுஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ ஆகும்.

சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் 2000 ஆம் ஆண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்ட்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது.

இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருட்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன.

உலக பெற்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கின்றது. மீன் போன்ற கடல் உணவுப் பொருட்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும்.

இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன.

இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கின்றது.

பசிபிக் பெருங்கடல் 

உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் இலத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது.

மேற்கில் அவுஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 16 கோடியே 92 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62.2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது.

உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன.

வடமேற்கு பசிபிக் கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 – 4188 மீட்டர் ஆகும்.

இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகின்றது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகின்றது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகின்றது.

பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச் சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published.