“புத்தளம் நூல் நிலையமே என்னைப் பட்டதாரியாக்கியது..!! மறைந்த ஆசான் ஸ்ரீரீஸ்கந்தராசா என்கிற மாமனிதர்..!! நெஞ்சினிலே நினைவிருக்கும்

· · 659 Views

நெஞ்சிருக்கும் வரைக்கும்………………………..

நமது நகரில் தரமான, இந்த மாகாணத்திலேயே மிகத் தரமான பொது நூலகம் இருக்கிறது. அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய அதன் முன்னேற்றத்தில் முன்னாள் நகர பிதா பாயிஸ் மிகுந்த அக்கரை கொண்டிருந்தார். இலட்சக் கணக்கில் அதற்காக செலவு செய்யப்பட்டது. மிகப் பெரிய அளவில் அதை நகர மக்கள் பிரயோசனப்படுத்தினார்களோ தெரியாது அங்குள்ள பல அம்சங்களில் சொற்குற்றம், பொருட் குற்றம் கண்டுபிடித்த ஆசிரியர்கள் அதைக் கொச்சைப் படுத்திப் பேசிய நினைகள் மனதில் கிடந்து வேதனை தருகின்றன.

srees kantha raja

”இந்த நூல் நிலையம்தான் என்னை ஒரு பட்டதாரியாக்கியது ஐயா” என்று இந்துவின் முன்னாள் அதிபர் மறைந்து ஸ்ரீரீஸ்கந்தராசா அவர்கள் என்னிடம் பெருமையாகப் பேசியது இன்னும் எனது காதுகளில் இனிக்கிறது.

தொட்டில் தொடங்கி சுடுகாடு வரையிலும் கல்வி என்று சொல்லப்படும் தத்துவத்தை நான் அவரிடம் கண்டுள்ளேன். என்னைக் காண எனது அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அவர் கையில் ஏதாவது ஒரு புத்தகம் கட்டாயம் இருக்கும். வெறுங் கையோடு அல்லது வேறு பொருட்களோடு நான் அவரைப் பார்த்ததே இல்லை.

இந்த ஓய்வு பெற்ற நல்லாசான் கையிலே, அறுபதுகளைத் தாண்டிய பின்னரும் நான் கண்ட புத்தகம் ஒரு நாள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

”நல்ல தமிழ் எழுதுவது எப்படி?” .

நல்ல தமழி்ல் எழுதுவது எப்படி என்று வாசித்துக் கொண்டிருந்த அவர் நல்ல தமிழில்தான் எப்போதும் பேசவார். என்னை சந்திக்க வரும்போதெல்லாம் ” அ……..ஸ்……..ஸ…. லா……….மு அலைக்கும் ” என்று அழகாக மொழிந்த வண்ணம் புன்முறுவலுடன் வருவார். பிரிந்து போகும் போது ”இன்ஸா அல்லா மீண்டும் சந்திப்போம்” என்று அழகாகக் கூறி விடை பெறுவார். ” மீண்டும் சந்திப்போம்” என்ற வார்த்தைகளில் அழகு தமிழ் பட்டொளி வீசிப் பிரகாசிக்கும்.

தன்னைப் பட்டதாரியாக்கிய புத்தளம் பொது நூலகத்தைப் போல ஒரு நல்ல நூலகம் தனது கிராமமான கட்டைக்காட்டில் அமைய வேண்டும் என்பது இந்த நல்லாசானின் பெரும் தாகம். நீண்ட நாள் போராட்த்தின் பின்னர் அதற்கான முதல் அடிகளை வைத்த பின்னர் என்னைச் சந்தித்தபோது.

” ஐயா நாங்கள் ஒரு நூலகத்தை ஆரம்பிக்கிறோம். உங்களைப் போன் நல்ல மனிதர்களின் உதவி அதற்குத் தேவை” என்று தெரிவித்தார். அது வரையில் எனது இளமைக் காலம் முதல் சிறுகச் சிறுக சேர்த்த புத்தங்கள் எல்லாம் எனது வீட்டு நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்த பரிதாப நிலை. நமது சந்ததிகள் அவற்றை வாசிக்கக் கூடும் என்று எண்ணி பாதுகாத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் பிள்ளைகளில் தொழிற் துறை மாறியதால் அவர்களின் தொழிற் துறை நூல்களால் எனது புத்தக ராக்கைள் பிரதியீடு செய்யப்பட்டபோது எனது தமிழ் நூல்கள் மூட்டை கட்டி ஒரு அறையில் போட்டு வைத்திருந்தேன்.

”என்னிடம் கொஞஞம் புத்தகங்கள் இருக்கிறது ஐயா. அவற்றை நான் உங்களுக்குத் தரலாம். ஆனால் எப்படி கொண்டு போகப் போகிறீர்கள் ” என்று கேட்டபோது தான் அன்று வாகனம் ஒன்றில் வந்ததாகச் சொன்னார். அவரையும் அவருடன் வந்தவர்களையும் எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நான்கு பொதிகளில் கட்டப்பட்டிருந்த புத்தகங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தேன்.

மகிழ்போடு அவற்றைப் பெற்றுக் கொண்ட அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் எனது அலுவலகத்தில் சந்தித்து ” சுமார் எத்தனை புத்தகங்கள் அந்த மூட்டைகளில் இருந்திருக்கும் என்று நினைக்கிறிர்கள் ” என்று கேட்டார். எனக்கு சரியாகத் தெரியாது என்று சொன்னேன். ”600 புத்தகங்கள் இருந்தன ஐயா அல்லாஹ் உங்களுக்கு நல்ல பாக்கியத்தைத் தருவார்” என்று கூறினார்.

வயது முதிர்வால் பின்னைய காலத்திலே நன்றாக இளைத்துப் போயிருந்தாலும் கம்பீரமான உடற் கட்டமைப்புக் கொண்ட , பழகுவதற்கு இனிமையான மனிதர். இரண்தொரு வாரத்துக்கு முன்னர் முந்தல் பிரதேச செயலகத்தில் கடமை செய்யும் ஒரு சகோதரி அவரது கடுமையான சுகவீனம் பற்றிச் சொன்னார். இரண்‌டொரு வாரத்துக்குப் பின்னர் அவர் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்ட ‌துயரச் செய்தியை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் குறுஞ் செய்தி மூலம் அறியக் கிடைத்போது வேதனையாக இருந்தது.

நெஞ்சிருக்கும் வரைக்கும் நிவைிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் பதிந்திருக்கும் என்றும்…………………………

எம்.எஸ்.அப்பாஸ் ஷரீப்

3 comments

  1. உண்மையில் இவர் மாமனிதர்,
    கண்ணியவான்,
    கனவான்.

  2. நான் நேசித்த ஒரு ஆசிரியரின் மரணத்தைக்கூட அறிந்திட முடியாத ஒரு துர்பாக்கியசாலி நான்.

    புத்தளம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் ஸ்ரீஸ்கந்தராசா என்னும் மாமனிதரின் மறைவை சில நிமிடங்களுக்கு முன்னர் அறிந்து ஆழ்ந்த துயருற்றுள்ளேன்.

    என்நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ள அந்த கணவானுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published.