25,000 டொலருக்கு குறைந்த பெர்மிட் வாகனங்களை யாருக்கும் விற்க முடியும் !!அரசாங்கம் அனுமதி

· · 502 Views

அரச சேவை கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களில் கடமையாற்றும் சிரேஷ்ட நிறைவேற்று தரத்திலான நிர்வாக, முகாமைத்துவ, தொழில்சார் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள், சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை சுற்றுநிருபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

கடந்த 2 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இந்த சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகள் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

சலுகை வாகன அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்யும்போதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போதும் பயனாளியால் செலுத்தப்பட வேண்டிய மொத்த உற்பத்தி வரி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வரி நிவாரணங்கள் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

 

சலுகை வாகன அனுமதிப் பத்திரங்களின் கீழ் கொள்வனவு செய்யப்படும் வாகனத்தின் முதலாவது பதிவு பயனாளியின் பெயரால் மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இதன்போது முதலாவது பிரிவின் கீழ் 25,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்குக் குறைந்த பெறுமதியுடைய வாகனங்களின் உரிமையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூன்றாம் தரப்பிற்கு வழங்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

25,000 அமெரிக்க டொலரை விடக் கூடுதலான பெறுமதியுடைய போதிலும் 30,000 டொலர்களுக்குக் குறைவான வாகனங்களை, குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைத் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக, முதலாவது பதிவிலிருந்து ஐந்து வருடங்கள் செல்லும் வரை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க முடியாது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதியில் இருந்து இந்த வருடம் மே மாதம் 31 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டு, மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்ட வாகனங்களை, சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைத் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக முதலாவது பதிவில் இருந்து ஐந்து வருடங்கள் கடக்கும் வரை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க முடியாது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.