‘விமல் செல்லாப்பாவை பார்க்க வந்த என்னை பொலீசார் தாக்கினார்கள்..!!விமலின் அண்ணன் மகள் முறைப்பாடு

· · 798 Views

பொலிஸ் நிதிமோசடி பிரிவிற்கு முன்பாக தன்னை பொலிஸார் தாக்கியதாகத் தெரிவித்து இளம் பெண் ஒருவர் கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

wimal-daughter

முன்னாள் வீடமைப்புத்துறை அமைச்சரும், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் உறவினராக தெரிவிக்கப்படும் குறித்த பெண் நேற்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் வீடமைப்புத்துறை அமைச்சராக பதவிவகித்தபோது அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று காலை பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் நிறைவில் அவர் நிதிமோசடி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு முன்பாக ஒன்று திரண்டு அமைதியின்மையை ஏற்படுத்தியதால் அப்பகுதிக்கு அதிகளவு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதன் காரணமாக விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களில் சிலருக்கும், பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டதோடு அந்த சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகளும் வெளியாகியன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சித்தப்பா என்று கூறிய குறித்த இளம் பெண், தன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து தனது சட்டத்தரணியுடன் சென்று முறைப்பாடு செய்தார்.

இதேவேளை நேற்றைய தினம் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு முன்பாக கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியிலும் குறித்த இளம் பெண் கருத்துக்களை வெளியிட்டார்.

“சிலரை கைது செய்து சிறைதள்ளி எமது வாய்களை மூடுவதற்கு முயற்சித்தால் நாங்கள் அச்சமடைய மாட்டோம். நாங்களும் அரசியலில் களமிறங்குவோம். ஆண்கள் இல்லாத அரசாங்கம் பெண்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. நான் முதற்தடவையாக இங்கு வந்துள்ளேன். பயப்பட வேண்டாம். சித்தப்பாவை சிறைதள்ளி அவர்கள் தனது நோக்கத்தை நிறைவுசெய்வார்களாயின் நாங்களும் எதிர்காலத்தில் அரசியலில் குதிப்போம். எங்களை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published.