“வட முஸ்லிம்கள் புலிகளுடன் இணைந்திருந்தால் வில்பத்து பிரச்சனைக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள்..!!முஜிபுர் ரஹ்மான் அதிரடி

· · 716 Views

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவருடன் வடக்கிலிருந்த முஸ்லிம் மக்களும் கைகோத்திருந்தால் வில்பத்து சரணாலயம் மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

muji

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக் குறியாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெறுவதாகவும், அதனுடன் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் மற்றும் சில முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்புபட்டிருப்பதாகவும் பேரினவாத அமைப்புக்களான பொதுபலசேனா, ராவணா பலய ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச வில்பத்து சரணாலய அழிப்புடன் நேரடியாக தொடர்புபட்டிருப்பாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்த நிலையில் வில்பத்து சரணாலய விவகாரம் குறித்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு ரேனுகா விடுதியில் இன்றைய தினம் நடைபெற்றது.

இலங்கை முஸ்லிம் மீடியா போரம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  “வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் காணிகள் அங்குள்ளவர்களால் அபகரிக்கப்பட்டன. சில காணிகளை விடுதலைப் புலிகள் கையகப்படுத்தி மாவீரர் துயிலும் இல்லங்களும் அமைக்கப்பட்டன. இதனால் குறித்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பிரச்சனையை அரசாங்கம் எதிர்கொண்டது. 1938ஆம் ஆண்டு வனம் என்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வவுனியா – கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் நாமல் ராஜபக்ச 3850 ஏக்கர் பகுதியை காடழிப்புச் செய்து நாமல்கம என்று பெயர் சூட்டி ஹம்பாந்தோட்டையிலிருந்து 5000 குடும்பங்களை அழைத்துச் சென்று அங்கு குடியேற்றம் செய்தார். வில்பத்து குறித்து பேசும் டலஸ் அழகப்பெரும இதுகுறித்து பேசவில்லையே. கார் பந்தயமும், அரச சொத்துக்களையும் கொள்ளையிட்டதை தவிர நாமல் இந்த நாட்டிற்கு என்ன செய்தார்? எங்கே சூழலியலாளர்கள்? எங்கே ஏனைய அமைப்புக்கள்? எனவே தற்போது எழுந்துள்ள பிரச்சனைக்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்படுகிறது. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவருடன் முஸ்லிம் மக்களும் கைகோத்திருந்தால் இன்றும் அவர்கள் அங்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.” என்று கூறினார்.

இதேவேளை நல்லாட்சிக்குள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைத்துவம் ஏன் அரசாங்கத்திடம் வில்பத்து பிரச்சினை குறித்து பேச்சு நடத்தவில்லை என ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  “இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் வெகுவிரைவில் கலந்துரையாட நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published.