வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்..!! புத்தளத்திலும் கான மழைப் பொழியப் போகிறது !!

· · 1068 Views

வங்காளவிரிகுடாவில், இலங்கையின் வடகிழக்காக, 1,400 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் அநேகமான இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கை நேரடியாகப் பாதிக்கப்படாது. எனினும், வடக்கு, தெற்கு, மேல் மற்றும் மலையகப் பகுதிகளில் 100- 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிய பெய்யலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

salt-6

இதே வேளை புத்தளம் உப்பு வாய்க்கால்களில் பொட்டாசியப் படிவு ஏற்பட்டுள்ளதால் உப்புச் செய்கையை முடிவுக்கு கொண்டு வருமாறு உற்பத்தியாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தகுதி வாய்ந்த அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புத்தளம் தனியார் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரிச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, பொட்டாசியப் படிவு சம்பந்தமாக தமது ஆய்வு கூடத்தில்  பரிசோதனை செய்யப்படுவதாகவும், இன்னும் அதன் பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்றும் அங்குள்ள பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், தமது நிறுவனம் புத்தளம் உப்பு உற்பத்தியின் சிறு பகுதியையே அறுவடை செய்ததாகவும் புத்தளத்தை  சூழ உள்ள செகுவன்தீவு, கல்பிட்டி, கடையாமட்டைப் பகுதிகளில் கூடுதலாக அறுவடை செய்யப்படுவதாகவும், அது பற்றியும் ஆய்வுகளை பத்திரிகைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் “காரமாக ” தெரிவித்தார்.

இதே நேரம் புத்தளம் கௌஸ் கொட்டேஜ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கொள்வனவு விலைகளைக் கேட்ட போது , தரம் குன்றிய உப்பையே அறுவடை செய்வதனால் இன்றைய சந்தை விலை 500/=  வாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உணவு உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் வர்த்தகர்கள்  இந்த தரம் குறைந்த  உப்பை நிராகரிப்பதால் தாம் இந்தியாவில் இருந்து மீளவும் உப்பு  இறக்குமதியை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கடந்த இரு வருடங்களாக புத்தளத்தில் கடும் மழை வீழ்ச்சியை அடுத்து புத்தளம் கடல் நீரேரி நன் நீரானதால் இந்த வருடத்திய உப்பு உற்பத்தி முழுமையாக குழாய்க் கிணறுகலூடாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாலி அலி

Leave a Reply

Your email address will not be published.