ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி சிரியாவை தாக்கும் US..!! எங்கெல்லாம் தாக்குகிறார்கள்..?

· · 350 Views

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள்   எங்கெல்லாம் தாக்குதல் நடந்துகின்றன..?

கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.

 

 

  • டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
  • ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
  • ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

ரஷ்ய படைகளைச் சேர்ந்தவர்கள் இறப்பைக் குறைக்கும் வகையில் தாக்குதல் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டன்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

 

கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

 

ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

 

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா அமெரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

“முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மீண்டும் அச்சுறுத்தப்பட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது. அனைத்து பொறுப்புகளும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் வசம் உள்ளன,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

 

 

பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

 

 

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

“டஜன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வரம்பு மீறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

 

 

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் ‘டோமாஹாக்’ வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

 

 

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.

 

 

தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிரியா நிறுத்தும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.

 

 

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.