ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன், மனோ கணேசன் உற்பட சில அமைச்சர்கள் பிரதமரை பதவி விலகுமாறு கோருவதற்கு தயாராகின்றனர் !! National politics

· · 944 Views

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முதல் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

சுவசிறிபாயவில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

 

 

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், றிசார்ட் பதியூதீன், மனோ கணேசன், பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த கோரிக்கையை முன்வைப்பதற்காக அடுத்த சில தினங்களில் பிரதமரை சந்திக்க உள்ளதாக அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

 

இதனிடையே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை குறித்து கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் கூடியுள்ளனர்.

 

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வது தொடர்பான பல விடயங்கள் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் ஒன்று நாளை தினம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

 

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக சில முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற முடியாது போனால், நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும் என அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.