ரணில் விக்ரமசிங்க முதுகில் குத்துவதை அமைச்சர் ஹக்கீம் இனியும் தாங்கிக் கொள்ளக் கூடாது !! திருப்பிக் குத்துமாறு வேண்டுகோள்

· · 1161 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள்  நேற்று முன்தினமும் (24) நேற்றும் (25) ஆற்றிய உரைகளில் தனது மன ஆதங்களை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை மீது அவருக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு அவற்றில் பிரதிபலிக்கின்றன. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் துரோகம் செய்யப்பட்டமை தொடர்பிலேயே அமைச்சர் அவர்கள் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

 

 

‘உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளினால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன’ என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதன் மூலம் அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது. அறுவைச் சிகிச்சை மூலம் அவற்றுக்கான அர்த்தங்களைக் கண்டுபிடிக்கும் தேவை எழாது.

 

 

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமயானது முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அந்தக் கட்சியை மடடுமல்ல முஸ்லிம் சமூகத்தையே இன்று ஏமாற்றியுள்ளது. எங்களைக் கருவேப்பிலையாகப் பயன்படுத்தி பாரிய துரோகத்தைச் செய்துள்ளது. இவைகள் அனைத்தும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்றும் இன்றும் ஆற்றிய உரைகளிலிருந்து நான் தெளிந்தவை. இவற்றினை அவர் பகிரங்கமாக தெரிவித்தமைக்கு எனது நன்றிகள்.

 

 

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். இதனை மக்கள் விரும்பாத போதும் தலைமை கூறுகிறது என்பதற்காக மக்கள் வாக்களித்தனர்.

 

 

உள்ளூராட்சி மன்ற பரப்புரைகளின் போது கூட தனது கட்சி ஏன் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டிடுகிறது என்பதற்கும் ஹக்கீம் அவர்கள் விளக்கம் அளித்திருந்தார். அதில் விசேடமாக, ‘ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதன் மூலம் அந்தக் கட்சிக்கு கடிவாளம் இடுவதனையே இலக்காகக் கொண்டு மிகச் சாணக்கியமாக தலைமை செயற்பட்டதாக’ அவர் கூறியது எனக்கு ஞாபகமுள்ளது.

 

 

ஆனால், இன்று நடந்தது வேறு, முஸ்லிம் காங்கிரஸுக்கே ஐக்கிய தேசியக் கட்சி மிகச் சாணக்கியமாகக் கடிவாளமிட்டு சமூகத்தை ஒரு அடிகூட சுயமாகச் செயற்படாத நிலைமையை உருவாக்கியுள்ளது.

 

 

தலைமை எப்போதும் சாணயக்கியமாகவே எதனையும் செய்யும் என்று கௌரவ அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கூறுவது இன்று சறுக்கி விட்டது. இதனை அவரது உரைகளில் உணரக் கூடியதாக உள்ளது.

 

 

‘எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்ற போது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம். நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.’ என அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம் அதிலுள்ள கடுமையான தன்மைகள் எந்தளவு பாரதூரமானவை என்பது தெளிவாகிறது.

 

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையை நம்ப, முஸ்லிம் மக்களோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை நம்ப இன்று இரு தரப்புமே ஐ.தே.க வால் ஏமாற்றப்பட்டு விட்டன. மாமனிதர் அஷ்ரஃப் அவர்கள் ரணில் தொடர்பில் சொன்னவைகளை மீண்டும் ஒரு தடவை இங்கு வலிதாக்கப்படுகிறது.

 

 

முழு முஸ்லிம் சமூகத்தையும் இன்று ஏமாற்றி, உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம் தலைமைத்துவங்களை, அங்கத்துவங்களை இல்லாமல் செய்ய முயற்சித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து பயணிப்பது தொடர்பில் ஹக்கீம் மேலும் கால அவகாசம் எடுத்துச் சிந்திக்க வேண்டிய தேவை இல்லை.

 

 

அமைச்சர் அவர்களின் இன்றைய (25) உரையில் ‘கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை. தனித்துவத்துடன் பயணிக்க வேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். எனவே, இனிமேலும், அவர் கொப்பளிப்பது கூழும் குடிப்பது பன்னீருமாகச் இருக்கமாட்டாது என நம்பலாம். அந்த நம்பிக்கை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடமும் உள்ளது.

 

 

ரணிலின் இந்தத் துரோகத்தனம் முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்துக்கே செய்த மாபெரிய துரோகமாகும்.

 

 

அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கடந்த 2014 ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கல்முனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார்

 

‘மறைந்த எமது தலைவர் அஷ்ரப்ஃ அவர்கள் மறைந்த ஆர். பிரேமதாசாவை ஜனாதிபதியாக்கி விட்டு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். பிரேமதாசாவை ஜனாதிபதியாக்கியர் எமது தலைவர் அஷ்ரப் என்பதை எந்த ஐக்கிய தேசியக் காரரும் மறுக்க முடியாது. பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி விட்டு எமது தலைவர் அஷ்ரப் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும் கூட அவரது நண்பராகவே இருந்தார்’ என்று அமைச்சர் ஹக்கீம் அன்று கூறியிருந்தார்.

 

 

ஆனால், இன்று நடப்பது என்ன? நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு காரணமானர்களில் ஒருவராக ஹக்கீம் இருந்துள்ளதுடன் அரசாங்கத்தின் பங்காளியாகவும் அமைச்சுப் பொறுப்புகளுடன் உள்ளார். இந்நிலையில் நல்லாட்சியின் பிரதம அமைச்சரான ரணில் விக்கிரமசிங்கவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் முஸ்லிம்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்துள்ள நிலையில் இன்னும் அவரின் பின்னால் தொங்குவதில்லை எந்த சமூக இலாபமும் இல்லை என்பதே எனது கருத்து.

 

 

மாமனிதர் அஷ்ரப்ஃ அவர்கள் ஆர். பிரேமதாசாவை ஜனாதிபதியாக்கி விட்டு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தது மட்டுமல்ல. சாதாரண எம்பியாகவே இருந்து கொண்டு தனது சமூகத்துக்கு தேவையானவற்றை எவ்வாறு பெற்றுக் கொடுத்தார். என்பதும் அறியாத விடயமல்ல.அபிவிருத்திகளுக்கு அப்பால் எமது சமூகத்தின் காவலானாக நின்று அவர் போராடி வெற்றி பெற்றார் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

எனவே, இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது, கட்சி, அரசியலுக்கு அப்பால் நின்று சமூம்சார்ந்த சிந்தனையுடன் செயற்பட்டு ஒரு தீர்க்கமான முடிவை உடன் எடுக்க வேண்டும்.

 

 

சொக்லேட் கேட்டு அழும் குழந்தைக்கு சாதாரண மிட்டாய் ஒன்றைக் கொடுத்து ஏமாற்றி தம்வசப்படுத்தக் கூடியவர்களிடம் அமைச்சர் ஹக்கீம் இனியும் ஏமாந்து விடாமல் (அப்படி ஏமாந்தால் தெரிந்து செய்யும் சுயநல அரசியல்) மிகத் தீர்க்கமான முடிவை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Leave a Reply

Your email address will not be published.