முருங்கை மரத்திலேயே அடக்கி வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா வேதாளங்கள்..!! தமது அக்கிரமத்தைக் காட்ட தருணம் பார்த்திருக்கிறார்கள்..!!

· · 1399 Views

நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு பல்வேறு அரசியல் காரணிகள் தடம்போட்டுக் கொண்டு இருக்கையில், முக்கியமான ஒரு தரப்பினர் அடக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிவராத தகவல்களாக இருக்கின்றன.

14199278_1196965283656830_5635924502810435937_n

கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, இலங்கையில் ஏனைய மதத்தினரையும், இனத்தினரையும் இல்லாமல் செய்வதற்கு அரசியல் சாராத நபர்களை முன்னாள் ஜனாதிபதி களத்தில் இருக்கியிருந்தார்.

தன்னுடைய அரசாங்கம் சாராமலும், ஆனால் பெரும்பான்மை மதத்தினை சார்ந்தவர்களையும், பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தோரையும் களம் அனுப்பிய மகிந்த, மதத்தலைவர்கள் என்னும் போர்வையில் இருந்தோரையும் வீதிக்கு இறக்கியிருந்தார்.

14222275_1196974306989261_8935386671438294149_n

2009ம் ஆண்டு புலிகளை அழித்ததன் பின்னர் வர்த்தக ரீதியிலும், ஏனைய செயற்பாடுகளிலும், இலங்கை முஸ்லிம் மக்கள் முன்னிலை வகித்த நிலையில், அவர்களையும் தமிழினத்தினைப் போன்று அழித்து இல்லாமல் செய்ய உருவாக்கப்பட்டது தான் இந்த பொதுபல சேனா என்னும் மதவாத அமைப்பு.

பௌத்த தேரர்களை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட இந்த அமைப்பிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினதும், கோத்தபாய ராஜபக்சவினதும் நேரடி வழிநடத்தல் இருந்தாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனால் முன்னைய ஆட்சியாளர்களின் காலத்தில் இவர்களின் செயற்பாடு தாராளப்பட்டுக் கொண்டிருந்தன. தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ யாரும் இல்லை.

இதனால் இனவாதக்கருத்துக்களுக்கும், மதவாதக்கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டதோடு, சர்வதேசத்திற்கு எதிரான பேராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர் பொதுபலசேனா அமைப்பினர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராகவும், பான் கீ மூனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அமெரிக்க அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என மேற்குலக நாடுகளைக் கண்டித்தும் இந்த குட்டி இளவரசர்களான தேரர்கள் துடித்தெழுந்திருந்தனர்.

எப்பொழுதெல்லாம் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் வெளிநாட்டு ராஜதந்திரிகள் இலங்கைக்கு வருகின்றார்களோ அப்பொழுது எல்லாம் இவர்களின் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் இன்றி கொழும்பு நகரின் இயல்பு வாழ்க்கை நடக்காது.

இத்தனைக்கும் முன்னாள் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதமும், ஊக்குவிப்பும் தான் மூலகாரணமாக இருந்தது. தமிழ் மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமக்கு உள்நாட்டில் எதிர்ப்பு அதிகமாக இருப்பதாகவும், சர்வதேசம் தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், இலங்கையில் தங்களை காக்க மக்கள் ஒன்றாக இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தவும் இந்த குழுக்களை இலாவகமாக பயன்படுத்தியிருந்தார்கள்.

அதனால் நொடிக்கொருமுறை இவர்கள், தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கூட புலி என்று கூறி அவருக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், மெல்ல இந்த பொதுபல சேனா அமைப்பினர் போன்றவர்களின் சத்தம் மெதுவாக குறையத் தொடங்கிற்று.

அதற்கு பல்வேறு அரசியல் காரணிகள் இருக்கத் தான் செய்கின்ற. நாட்டில் நாட்டில் நல்லாட்சி அமைக்கப்பட்டுள்ளதாக காட்டிக் கொள்ளும் இந்த அரசாங்கம், வெளிநாட்டுச் சக்திகளுக்கு இங்கே மதவாதமோ அன்றி இனவாதமோ இல்லை என்பதை காட்டவேண்டிய தேவை இருக்கிறது.

தவிர, உள்நாட்டில் இருக்கும் இந்தச் சிக்கல்களால் ஏனைய இனமக்களை அரவணைத்துக் கொண்டு செல்வதும் மிகப் பெரியதொரு இடர்பாடாகவே இருக்கின்றதை உணர்ந்த மைத்திரி ரணிலின் தொடர் அழுத்தத்தினால் இந்த அமைப்புக்கள் சற்று மௌனிக்கப்பட வேண்டிய கட்டாயமான சூழலுக்குள் தள்ளப்பட்டனர்.

இன்று மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் தற்காலிகமாகவே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மகிந்த ராஜபக்ச தன்னுடைய அரசியல் தேவைகளுக்காக இந்த அமைப்புக்களையும் குழுக்களையும் உருவாக்கியிருந்தாலும், அவற்றின் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பினும், தங்களுக்கான தேவை வரும் பொழுது இவர்களை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கும் இன்றுள்ள தலைமைகள் தயங்கமாட்டார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகள் வரலாற்றில் நிறையவே நடந்துள்ளன. எனவே அடக்கப்பட்டதாக இன்று கருதப்படும் பொதுபல சேனா போன்ற அமைப்பினர் தற்காலிகமான உறங்கு நிலையில் தான் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்கள் காளான் மாதிரி, அந்தந்தக்காலங்களில் சரியான நேரங்களில் வருவார்கள். இப்பொழுது அவர்களுக்கான தேவை நாட்டில் இல்லை. தேவை ஏற்படும் போது குரல்கள் பழைய படி ஆர்ப்பரிக்கத் தொடங்கும், போராட்டங்கள் தலையெடுத்தாடும்.

அவர்கள் தருணத்திற்காக காத்திருக்கிறார்கள்….! மகிந்த ராஜபக்சவைப்போல..,

One comment

  1. It’s a true and fact politicians will do everything possible to protect them self and to be in power.

Leave a Reply

Your email address will not be published.