மாதம்பைக் கலவரம் : அவர்கள் vs இவர்கள் : மாதம்பை தவ்ஹீத் ஜமாத்தின் ஜும்மா குறித்த ஜமாதே இஸ்லாமியின் விமர்சனத்துக்கு பதில் – SLTJ

· · 233 Views

mada1-copy

 

‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 03: 31

”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 03: 32

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது ஏகத்துவப் பிரச்சாரத்தை நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் புத்தளம் மாவட்டம் மாதம்பை என்ற ஊரிலும் கடந்த 03 வருடங்களாக தவ்ஹீத் ஜமாஅத் தனது மார்க்க மற்றும் சமுதாய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஐங்காலத் தொழுகைகள் மற்றும் குர்ஆன் விளக்க, ஹதீஸ் விளக்க வகுப்புகள், குழந்தைகளுக்கான தனியான குர்ஆன் மத்ரஸா போன்றவை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தொடராக அங்கு நடைபெற்று வருகின்றது.

தனியான ஜும்ஆ ஆரம்பம்.

மாதம்பை வாழ் தவ்ஹீத் சகோதரர்கள் கடந்த காலங்களிலிருந்து தங்கள் மார்க்கக் கடமைகளையும், ஐங்காலத் தொழுகைகளையும் தனியாக நடத்தியதைப் போல ஜும்ஆ தொழுகையையும் நபி வழி அடிப்படையில் தனியான தொழுவதற்கு தயாரானார்கள்.

தனியாக ஐங்காலத் தொழுகை மற்றும் ஜும்ஆ ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே மாதம்பையில் இருக்கும் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு (ஜமாஅத்தே இஸ்லாமியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாயல்) குறித்த பள்ளியில் நடைபெரும் பித்அத்தான மார்க்கத்திற்கு முரனான காரியங்களை சுட்டிக் காட்டி அவற்றை திருத்தி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஜும்ஆவை அமைக்கும்படி வேண்டிக் கொண்டதுடன், குறித்த மார்க்கத்திற்கு முரனான விஷயங்கள் என்ன என்பதைப் பற்றிய பட்டியலையும் ஒப்படைத்து குறித்த விடயங்கள் தொடர்பில் (ஜமாஅத்தே இஸ்லாமி) பள்ளி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாஅத்துடன் பேசத் தயார் என்றால் குறித்த பள்ளியிலேயே மக்கள் மத்தியில் நாம் பேசத் தயார் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் கொடுத்துவிட்டுத் தான் தவ்ஹீத் சகோதரர்கள் தனியாக தமது மார்க்க காரியங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்த அடிப்படையில் தனியாக தொழுதவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் தற்போது மார்க்க அடிப்படையில் நமது “தனித்த ஜும்ஆ” தொடர்பில் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அந்த விமர்சனங்களுக்குறிய பதில்களை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் இப்போது பார்ப்போம்.

தவ்ஹீத் ஜமாத்தின் தனியான ஜும்ஆ தொடர்பில் ஜமாஅத்தே இஸ்லாமியின் 02 விமர்சனங்கள்.

  • ஒரு சிறு குழு தனியாக ஜும்ஆ செய்ய மார்க்கத்தில் அனுமதியில்லை.
  • பள்ளியில் தான் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட வேண்டும்.

­ஜமாஅத்தே இஸ்லாமியினர் தவ்ஹீத் ஜமாஅத் மீது வைக்கும் முதலாவது விமர்சனம் ஒரு சிறு குழு தனியாக ஜும்ஆ செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதாகும்.

ஜும்ஆவுக்கு எத்தனை நபர்கள் இருக்க வேண்டும்?

ஒரு கூட்டத்தினர் ஜும்ஆ செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும் என்று கூறி கீழுள்ள புகாரி ஹதீஸ் ஆதாரமாக வைக்கப்படுகின்றது.

903حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضَمَاتِ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ رواه أبو داود

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கை செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.  நான் அவர்களிடம், “நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கை செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காக பிரார்த்தனை செய்கின்றீர்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர்தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் களமாத் என்று அழைக்கப்படக்கூடிய தண்ணீர் நிறைந்த பகுதியாகும்” என்று பதில் கூறினார்கள்.  “அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்டேன்.  அதற்கு “நாற்பது பேர்” என்று பதில் சொன்னார்கள்.

நூல் : அபூதாவுத் (903)

ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று கூறுவோர் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது என்றாலும் இவர்களின் வாதத்துக்கு வலுசேர்க்கும் எந்த அம்சமும் இந்த ஹதீஸில் இல்லை.

மதீனாவில் முதன் முதலில் நடத்தப்பட்ட ஜும்ஆவில் நாற்பது நபித்தோழர்கள் கலந்து கொண்டதாக இச்செய்தி கூறுவதால் ஜும்ஆத் தொழுகைக்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று வாதிடுகின்றனர்.

“நாங்கள் நாற்பது நபர்கள் இருந்தால் தான் ஜும்ஆ நடத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று ஹதீஸில் சொல்லப்பட்டு இருந்தாலே இதை அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டலாம். ஆனால் குறித்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசப்படவே இல்லை. அத்துடன் நாற்பது நபர்கள் இருப்பது ஜும்ஆவிற்கு அவசியம் என்று நபித்தோழர்களும் கூறவில்லை.

நாற்பது நபர்கள் இருந்தோம் என்று ஒரு தகவலாகவே இதை நபித்தோழர்கள் குறிப்பிடுகின்றனர். அன்றைக்கு முப்பது நபர்களோ இருபது நபர்களோ பத்து நபர்களோ ஏன் இரு நபர்களோ இருந்திருந்தாலும் அவர்கள் ஜும்ஆ நடத்தி இருப்பார்கள். நாற்பதை விட கூடுதலாக இருந்திருந்தாலும் ஜும்ஆ நடத்தியிருப்பார்கள்.

ஜும்ஆ நடத்துவதற்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் இல்லை என்பதால் தான் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அதை முக்கியத்துவப் படுத்திப் பேசவில்லை. அவர்களிடம் அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் நீங்கள் அன்றைக்கு எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று கேள்வி கேட்ட பிறகு  இதைப் பதிலாகத் தெரிவிக்கின்றார்கள். எனவே இந்தச் செய்தியை வைத்து ஜும்ஆத் தொழுகைக்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று வாதிடுவது தவறு.

ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டும் என்று மத்ஹப் நூற்களில் சட்டம் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நிபந்தனையிடுவதற்கு குர்ஆனிலோ ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை. மார்க்கத்தில் கூறப்படாத நிபந்தனைகளை இடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை.

ஜமாஅத்தே இஸ்லாமியின் அறிஞர்களைப் பொருத்த வரையில் அவர்கள் மத்ஹபு நூற்களையும் ஆதாரமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற வகையில் தான் மத்ஹபு சட்டங்களை மக்கள் மத்தியில பரப்பி வருகின்றார்கள்.

ஜும்ஆவைப் பொறுத்தவரை அது கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகை. கூட்டுத் தொழுகைக்கு குறைந்தது இரண்டு நபர்கள் இருந்தாலே போதுமானது. இதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் மட்டும் சேர்ந்து ஜமாஅத் நடத்தியுள்ளனர். 

699حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَقُمْتُ أُصَلِّي مَعَهُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தம் வலப் பக்கம் நிறுத்தினார்கள்.

(புகாரி – 699)

எனவே ஜும்ஆ என்பது கூட்டுத்தொழுகையாக இருப்பதால் குறைந்தது இரண்டு நபர்கள் இருந்தாலே ஜும்ஆ நடத்தலாம். ஒருவர் உரையாற்றி தொழுகை நடத்த வேண்டும். மற்றொருவர் அவரது உறையை கேட்க வேண்டும். அவருடன் சேர்ந்து தொழ வேண்டும்.

ஜும்ஆவிற்கு நாற்பது நபர்கள் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் தவறு என்பதை பின்வரும் ஹதீஸ் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

936حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ حُصَيْنٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَتْ عِيرٌ تَحْمِلُ طَعَامًا فَالْتَفَتُوا إِلَيْهَا حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا رواه البخاري

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் :

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், “அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்.” (62:11) என்ற வசனம் இறங்கியது.

(புகாரி – 936)

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டு நபர்கள் மட்டுமே இருந்துள்ளனர். ஜும்ஆவிற்கு 40 நபர்கள் அவசியம் இருக்க வேண்டும் என்றால் பன்னிரெண்டு நபர்களை மட்டும் வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நடத்தியிருக்க மாட்டார்கள். எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் ஜும்ஆவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து ஜும்ஆவை நடத்தியுள்ளார்கள்.

 மேற்கண்ட செய்தியிலும் ஜும்ஆவின் போது ”நாங்கள் பன்னிரெண்டு பேரைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை”  என்று குறிப்பிடப்படுவதை வைத்து பன்னிரெண்டு பேர் இருந்தால் தான் ஜும்ஆ கடமை என்று யாராவது புதிதாக வாதிடுவார்களேயானால் அதுவும் தவறுதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாதம்பையில் நடத்தப்பட்டு வரும் ஜும்ஆ மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜும்ஆவை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா?

மாதம்பை தவ்ஹீத் சகோதரர்கள் தமது தஃவா பணிகளை தனியாக வாடகைக் கட்டிடம் ஒன்றில் செயல்படுத்தி வருகின்றார்கள். இப்படி வாடகைக் கட்டடத்தில் தனியாக ஜும்ஆ தொழுவது கூடாது என்பதுதான் ஜமாஅத்தே இஸ்லாமியினரின் வாதமாகும்.

குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஜும்ஆ தொழுகை தொழுவதற்கான இடம் எப்படியிருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னர் மதீனாவைச் சேர்ந்த சிலர் மக்கா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர். அவர்கள் மதீனா சென்றதும் அங்கே ஜும்ஆ நடத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பள்ளி வாசல் கட்டும் வரை அந்த மக்கள் பள்ளிவாசல் அல்லாத காலியிடத்தில் தான் ஜும்ஆ தொழுது வந்தனர். இதற்கான ஆதாரம் வருமாறு:

903حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضَمَاتِ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ رواه أبو داود

அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.  நான் அவர்களிடம், “நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காகப் பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர் தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் களமாத் என்று அழைக்கப்படக்கூடிய தண்ணீர் நிறைந்த பகுதியாகும்” என்று பதில் கூறினார்கள்.  “அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்டேன்.  அதற்கு “நாற்பது பேர்” என்று பதில் சொன்னார்கள்.

நூல் : அபூதாவுத் (903)

தகுந்த காரணங்கள் இருந்தால் கடமையான தொழுகையைப் பள்ளி அல்லாத வேறு இடங்களில் நிறைவேற்றுவதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது போன்று ஜும்ஆத் தொழுகையை பள்ளி அல்லாத வேறு இடங்களில் நிறைவேற்றுவதற்கும் நியாயமான காரணங்கள் இருக்குமேயானால் அப்போது அவ்வாறு ஜும்ஆத் தொழுவது தவறல்ல.

சில பகுதிகளில் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட பள்ளிகள் மட்டுமே இருக்கும். சில பகுதிகளில் பள்ளிவாசல் என்று எதுவும் இருக்காது.

சில பகுதிகளில் நபிவழி அடிப்படையில் செயல்படும் பள்ளிகள் இருக்காது. ஜும்ஆவில் இஸ்லாத்தை அதன் தூய்மையான அடிப்படையில் போதிக்க மாட்டார்கள். மாதம்பைப் பகுதியிலும் இதுதான் நிலை. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதைத் தவிர்த்து தங்கள் இயக்க அடிப்படையில் மார்க்கத்திற்கு முரணாக செயல்படுத்தகின்ற காரணத்தினால் அங்கு தவ்ஹீத் மக்கள் தொழ முடியாத நிலையிருக்கின்றது.

நமக்கு என்று தனிப்பள்ளி இருந்தால் நாமே அதில் ஜும்ஆத் தொழுகையை நடத்திடுவோம். ஆனால் பள்ளி கைவசம் இல்லாத இது போன்ற நேரங்களில் குர்ஆன் ஹதீஸை தூய்மையான வடிவில் மக்களுக்குப் போதிப்பதற்காக பள்ளி அல்லாத வேறு இடத்தில் ஜும்ஆத் தொழுகையை நடத்துவது தவறல்ல. இதை மார்க்கம் தடை செய்யவில்லை. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தலைமையில் எப்படி முதலாவது ஜும்மா தொழுகை ஹஸ்முன் நபீத் என்ற இடத்தில் நடத்தப்பட்டதோ அதே அடிப்படையில் தான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்காத மாதம்பை (ஜமாஅத்தே இஸ்லாமி) பள்ளியை விட்டு விட்டு தவ்ஹீத் சகோதரர்கள் குர்அன் சுன்னா அடிப்படையில் தனியாக ஜும்ஆ தொழுகை நடத்துக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : sltj.LK

Leave a Reply

Your email address will not be published.