மக்களின் முதல்வர் மீராக சாகிபு முகம்மது பாரூக்..!! மக்களுக்காக மக்களின் சைக்கிளில் பயணித்த நகர சபை உறுப்பினர்

· · 401 Views

பாத்திமா கல்லூரியின் சிறிய வாசற் பக்கத்துக்கு எதிராக, கிரஸன்ட் சினிமாவுக்குப் பக்கத்தில் செல்லும் வீதிக்கு பெயர் போள்ஸ் வீதி, ஒழுங்கை இலக்கம் 09. அந்த வீதி நேராகப் போய் KK வீதியை சென்றடைகிறது. அந்தப் பாதையின் கடைசி வீட்டின் பக்கத்தில் தெரு ஓரமாக ஒரு நாற்காலி போட்டு மாலை வேளைகளில் ஏகாந்த சுகத்தை அனுபவித்து வரும் இந்த மனிதரை இந்தப் பக்கம் , அந்தப் பக்கமாகப் போவோர் வருவோர் அவதானிக்கலாம். ஆனாலும் அவரைப் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. ” யாரோ ஒரு வயசாளி” என்று நினைத்துக் கொண்டு அவர்கள் போகக் கூடும்.

 

 

 

78 வயதாகிப்போன இவர் மீராக சாகிபு முகம்மது பாரூக். நகரத்தின் மூத்த உள்ளுர் அரசியல் பிரமுகர், மூத்த இடதுசாரி போராளி. கலாநிதி எஸ்.ஏ. விக்ரமசிங்ஹ, பீட்டர் கெனமன் போன்ற இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தேசிய தலைவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு, புத்தளத்துக்கான கம்யூனிஸ் கட்சி முழு நேர அமைப்பாளராக செயற்பட்ட பாருக் காக்கா 1965 முதல் 1977 ஆம் ஆண்டு வரையில் புத்தளம் நகர சபையில் 08 ஆம் வட்டார உறுப்பினராகச் செயற்பட்டவர். அந்தக் காலத்து First – Past – The Post என்னும் நேரடி வட்டார அல்லது தொகுதி முறையில் ‌தெரிவு செய்யப்பட்ட, சம்பளம் இல்லாமல் சேவை செய்தவர்களின் மிச்ச சொச்சம்.

 

 

 

 

 

ஊதியம் இல்லாமல் தொண்டு செய்த காலத்தில் நகர சபை கூட்டங்களுக்கு சமுகமளிக்க புதிய வட்டார மாற்றங்களுக்கு முந்திய 08 ஆம் வட்டாரப் பகுதியில் இருந்து புத்தளம் நகர சபைக்கு வருவது என்றால் எவ்வளவு சிரமமான காரியம்? இந்தக் காலத்தில் போன்று மோட்டார் சைக்கிள்களும், கார்களும் இருந்த காலமா அது? ”கிரீச்……” கிரீச்…….” என்று ஒலி எழுப்பும் ஒயில் வற்றிக் காய்ந்த Chain , பெரும்பாலும் இத்துப் போன Rim, தேய்ந்து போன டயர் களைக் கொண்ட சைக்கிளில், முன்னேறிச் செயல்ல விடாது தடுக்கும் கடற்கரைக் காற்றுடன் எதிர் நீச்சல் போட்டு நேரத்துக்கு வந்து சபைக் கூட்டஙகளில் கலந்து உண்மையான சமூகப் பணி செய்த போராளியரில் ஒருவர் என்றுதான் பாரூக் காக்காவை அறிமுகம் செய்ய வேண்டும்.

 

 

 

இடது சாரி என்றாலே மக்கள் ஏறிட்டும் பார்க்காத , பார்க்க விரும்பாத காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக் கொடியை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்து செம்மைப் புரட்சி செய்த அந்தக் காலத்து இளசுகளில் இந்த பாரூக் காக்கா குறிப்பிடத் தக்கவர். இடது சாரிக் கொசள்ளைகளை இந்த மண்ணில் பரப்ப பாரூக் காக்காவுடன் தோழோடு தோழ் சேர நின்றவர்கள் முன்னாள் நகர சபை, வடமேல் மாகாண சபை ஆகியவற்றின் உறுப்பினரான மர்ஹூம் டீ.எம். இஸ்மாயீல், முன்னாள் நகர பிதா மர்ஹும் எச்.எச் ஹுசைன், நவாஸ் டெக்ஸ்டைல் W.T.O ஜவுவர் உள்ளிட்ட இன்னும் பலர் இருந்தார்கள். அவர்கள் இப்பேது நம் மத்தியில் இருந்து விடை பெற்ற நீண்ட காலமாகிப் போனது.

 

 

 

யார் ஏற்றுக் கொண்டாலும் சரி, நிராகரித்தாலும் சரி கடற்கரைப் பக்கமாக வாழும் மக்களை நகரின் ஏனை பகுதிகளில் வாழ்பவர்கள் பெரிதாக மதிப்பதில்லை என்துதான் யதார்த்தம். அவர்களை விட தாம் கொஞம் ஏற்றம் என்ற ஒரு நினைப்பு இவர்களுக்கு. ஆனாலும் அந்தக் காலத்திலேயே ஒரு இடதுசாரியை நகர சபைக்கு தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்த 08 ஆம் வட்டார மக்கள் இன்னும் ஒரு முன் உதாரணம் இல்லாத காரியத்தையும் செய்து காட்டினார்கள். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரைப் பெரும்பாண்மையாகக் கொண்ட எட்டாம் வட்டாரத்தில் சிறு சிறு துளிகளாகச் சேர்த்து ஒரு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி பாரூக் காக்காவுக்கு அன்பளிப்புச் செய்ததுதான் அந்த முன்னுதாரணமற்ற கைங்கரியம்.

 

 

சிறுவனாக இருந்த நாட்களில் அந்த சைக்கிள் அன்பளிப்புச் செய்யும் விழாவில் நானும், எனது நன்பர் ஆட் மாஸ்டர் ரபீக்கும் போய் கலந்து கொண்டோம். அதில் கலந்து கொள்வதற்கு நாங்கள் அவ்வளவு தூரம் நடந்துதான் போனோம். அந்த நாட்களில் ஒரு சைக்கிள் ஒன்றை 750 ரூபாவுக்கு வாங்கலாம். இங்கு விலை அல்ல பிரச்சினை. அந்த மக்களின் முன்மாதிரியான செயற்பாடு. இன்னும் நினைவு பசுமையாக இருக்கிறது. அது Rudge வகை சைக்கிள் என்ற நினைவு இன்னும் என் மனதில் பசமையாக இருக்கிறது.

 

 

 

ஊதியம் வாங்கிக் கொள்ள மாட்டோம் என தேர்தல் கால வாக்குறுதிகளை வழங்குபவர்களுக்கெல்லாம் ஊதியமே இல்லாது, கால் நடையாக மைல் கண்கில் நடந்து அல்லது பழைய கி…..ரீ….ச்……..கி……ரீ……ச் சைக்கிள்களில் வந்து சேவை செய்தவர்களை இந்த தேர்தல் காலத்திலாவது நினைவுபடுத்தக் கூடாதா என்ன?

Leave a Reply

Your email address will not be published.