பொத்தானை தைக்காவுக்கு தனது பரிவாரங்கள் சூழ வந்தார் மு.கா. தலைவர்..!! விரைவில் தீர்வு என்கிறார்

· · 410 Views

தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொத்தானை பிரதேசத்திலுள்ள ஆராய்ச்சி மரைக்கார் தைக்காவுக்கு விரைவில் தீர்வினை பெற்றுத் தருவேன் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

pottanai-hakeem-visit-4

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொத்தானை பிரதேசத்துக்கு இன்று சனிக்கிழமை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம் மேற்கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது,

‘பல நூற்றாண்டுகள் வரலாறுடைய இந்த தைக்காவில் நடைபெறுகின்ற ஆன்மீக நிகழ்வுகளில் பொத்தானை ஊர்களில் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பலர் கலந்துகொண்ட வரலாறுகள் உள்ளன. இவ்வாறானதொரு தைக்காவுக்கு தொல்பொருளியல் திணைக்களம் யாரும் உட்பிரவேசிக்கக்கூடாது என்ற வகையில் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திவிட்டு சென்றுள்ளது.

தொல்பொருளியல் திணைக்களத்தின் இந்த செயற்பாடு தைக்காவை பாதுகாப்பதாக இருந்தாலும், இங்கு நடைபெறுகின்ற மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கு எந்தவகையிலும் குந்தகம் விளைவிக்கக்கூடாது. இது முஸ்லிம்களின் பூர்வீக இடம் என்பதற்கான ஆதாரங்களை ஒன்றுதிரட்டி, தொல்பொருளியல் திணைக்களத்திடம் அவற்றை சமர்ப்பித்து சட்டரீதியில் இதற்கு தீர்வுகாண்போம்.

அத்துடன், வருடாவருடம் நடைபெற்றுவரும் ராத்திப் மஜ்லிஸும் கந்தூரி நிகழ்வும் இன்னும் ஓரிரு வாரங்களில் இங்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளுக்கு எவ்விதத்திலும் இடையூறுகள் ஏற்படாதவாறு நாங்கள் தொல்பொருளியல் திணைக்களத்துடன் பேசி தீர்வுகளை பெற்றுத்தருவோம்.

அதுபோல, பொத்தானை பிரதேசத்திலுள்ள வயல் காணிகளில் பயிர்ச்செய்கை பண்ணாமல் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் வனபரிபால திணைக்கள அதிகாரிகள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்போது நாங்களும் வந்து, பொத்தானை மக்களின் விவசாயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுப்போம்’ என்றார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர், ஆரிப் சம்சுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

– See more at: http://www.tamilmirror.lk/189383/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-#sthash.dDO2tR8U.dpuf

Leave a Reply

Your email address will not be published.