புத்தளம் நகர சபையை ஐ.தே.க.வே ஆட்சி புரியும் !! முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் இணைந்து கொள்ளலாம் – சேர்மன் பதவி கொடுக்க இயலாது

· · 1811 Views
புத்தளம் நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
புத்தளம் நகர சபையில் ஐ.தே.க ஆட்சியமைப்பதற்கு  ஸ்ரீ.சு.க, சுயேட்சைக்குழு மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு குறித்த கட்சி மற்றும் சுயேற்சைக்குழு உறுப்பினர்களுடன் எமது கட்சி பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வி- புத்தளம் நகர சபையில் 7 வட்டாரங்களில் வெற்றிபெற்ற மு.காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
பதில் – அவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. எனினும் எமக்கு ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கையில், நாம் மு.காவுக்கு அழுத்தங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அவர்கள் விரும்பினால் எமக்கு ஆதரவு வழங்கலாம். ஆனால், தலைவர் பதவி கொடுக்க முடியாது.
கேள்வி- புத்தளம் நகர சபையை ஐ.தே.க ஆட்சியமைத்தால் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும்?
பதில் – தற்போது கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளே இடம்பெறுகிறது. தவிர, தலைவர் பதவி தொடர்பில் .இதுவரை முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.
இதேவேளை, புத்தளம் நகர சபைத் தேர்தலில் 1581 வாக்குகளைப் பெற்று  ஒரு போனஸ் ஆசனத்தை பெற்றுள்ள  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புத்தளம் முக்கியஸ்தர் ஒருவரை தொடர்புகொண்டு நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டபோது,
உள்ளுராட்சி சபைகளில் சுயாதீனமாக இயங்கவே எமது கட்சி தீர்மானித்துள்ளது. எனினும், புத்தளம் அரசியலைப் பொறுத்தவரை எமது கட்சி தீர்மானம் எடுக்கின்ற அதிகாரத்தை எமக்கு வழங்கியுள்ளது.
புத்தளம் நகர சபையில் நாங்கள் சுயாதீனமாகவே இயங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். எனினும் ஐ.தே.க மற்றும் மு.கா கட்சிகள் எங்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் சலுகைகளைப் பெற்றுகொண்டு ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக சமூக வளைத்தளங்களில் ஒருசிலர் எங்கள் மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்.

எனினும் நாங்கள் ஆதரவு தருகிறாம் என்று யாருக்கும் உறுதிமொழி கொடுக்கவில்லை என்பதை எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு மிகவும் பொறுப்புணர்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன், புத்தளம் நகர சபையில் எமது கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது என்ற ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஆட்சியமைக்க கோரும் கட்சியுடன் உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் ஒரு திறந்த உடன்படிக்கை மூலம் மாத்திரமே இணைந்து எமது ஆதரவை வழங்குவோம் என்றார்.

இதேவேளை, புத்தளம் நகர சபைத் தேர்தலில் 7 வட்டாரங்களில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
– முஹம்மட் ரிபாக், சாஹிப் அஹம்மட்
By : LR

Leave a Reply

Your email address will not be published.