எதிரணியால் கொண்டுவரப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால்தோற்கடிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் வழங்கப்பட்டன. 26 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பிரேரணைக்கு ஆதரவாக மகிந்த ஆதரவு கூட்டு எதிரணி உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஜேவிபி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அரசியல் பழிவாங்கல் மூலம் அமைச்சுப் பதவியையிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வாக்களிப்பில் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் நிசாந்த முத்துகெட்டிகம மற்றும் காதர் மஸ்தான் வாக்களிப்பு வேளை சபையில் இல்லை.
பிரேரணையில் கையொப்பமிடாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச இருவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மகிந்த அமரவீர,நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மகிந்த சமரசிங்க, விஜயமுனி சொய்சா, ரஞ்சித் சியாபலப்பிட்டிய, பௌசி, பியசேன கமகே, எம்எல் குரேர, சிரியானி விக்கிரமரட்ண மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் வாக்களிப்பு நேரம் சபையில் இல்லை.
ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் வாக்கெடுப்பு நேரம் சபையில் இல்லை.
சபாநாயகர் கரு ஜெயசூர்ய சம்பிரதாய முறைப்படி வாக்களிக்கவில்லை. பிரதி சபாநாயகரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான திலங்க சுமதிபால நடுநிலை வகித்து வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.