” நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் !! மைத்திரியால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அருந்திக சபதம் போட்டார்

· · 559 Views

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பிரதியமைச்சராக கடமையாற்றியதாகவும் நடைமுறையிலுள்ள ஆட்சியை மாற்றியமைக்க மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 

 


இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“என்னை, மக்களே தெரிவு செய்தனர். நான் அமைச்சுப் பதவியை வகிப்பதில் மக்களின் எதிர்ப்பு காணப்பட்டது.இந்த அரசாங்கம் உரிய முறையில் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டே அதற்குக் காரணமாகும். இப்போது பதவியில் இல்லை. நான் மக்களுடன் இணைந்து அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.

 

 

இந்த ஆட்சியின் தவறான பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 


 

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (12) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் எதிர்வரும் வாரங்களில் விலகவுள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தினை இவர் வெளியிட்டிருந்தார்.

 

அருந்திக பெர்ணான்டோ, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜப்பானில் சந்தித்ததாகவும் கூறப்பட்டது.

 

அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இன்று (12) இரவு கொழும்பில் நடைபெறவுள்ளது.

 

 

 

இந்தச் சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.

 

இந்தச் சந்திப்பில் தவறாது கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நேற்று (11) அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.