டிரம்பின் ஜெருசலம் பற்றிய அறிவிப்புக்கு எதிர்பாராவிதமாக ஐரோப்பிய நாடுகள் கண்டனம்..!! உலகெங்கும் போராட்டம்

· · 825 Views

இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரித்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு, இஸ்‌ரேல் தவிர, உலக நாடுகள் அனைத்திலிருந்தும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. ஐ.அமெரிக்காவின் பிரதானமான தோழமை நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்றன கூட, தமது வெளிப்படையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

 

 

 

இது தொடர்பில் உலக நாடுகளும் சில அமைப்புகளும் வெளியிட்ட கருத்துகள் பின்வருமாறு:

இஸ்‌ரேல்: ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிவிப்பைப் புகழ்ந்த இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இவ்வங்கிகாரத்தை “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் “தைரியமானதும் நியாயமானதுமான முடிவு” என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

 

பலஸ்தீனம்: ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு சமாதான முயற்சியில், ஐக்கிய அமெரிக்கா இனிமேலும் முக்கிய பங்களிக்க முடியாது என, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்தார். ஏற்றுக்கொள்ள முடியாத அறிவிப்பு எனத் தெரிவித்த அவர், இதன் மூலமாக அனைத்துச் சமாதான முயற்சிகளும் பாதிக்கப்படுகின்றன என்றார்.

 

 

 

பலஸ்தீன விடுதலை இயக்கம்: இஸ்‌ரேலிய – பலஸ்தீன முரண்பாட்டுக்கு, இரு தேசங்கள் என்ற தீர்வுக்குக் காணப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையும், ஜனாதிபதி ட்ரம்ப் அழித்துவிட்டார் என, இயக்கத்தின் செயலாளர் நாயகம் சாப் எரேகட் தெரிவித்தார்.

 

 

 

ஹமாஸ்: ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவு, பிராந்தியத்தில் ஐ.அமெரிக்க நல்களுக்கான நரக வாயிலைத் திறக்குமென, ஹமாஸ் இயக்கம் தெரிவித்தது.

 

 

 

 

ஐக்கிய நாடுகள்: முடிவை விமர்சித்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், ஜெருசலேத்தின் நிலைமை, இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

 

 

 

 

ஐக்கிய இராச்சியம்: ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவோடு, பிரதமர் தெரேசா மே முரண்படுகிறார் எனத் தெரிவித்த ஐக்கிய இராச்சியம், சமாதான முயற்சிகளுக்கு, இம்முடிவு உதவாது எனக் குறிப்பிட்டது.

 

 

 

 

பிரான்ஸ்: ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிலைப்பாட்டை “வருந்தத்தக்கது” என வர்ணித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், இரண்டு தேசங்கள் என்ற தீர்வுக்கான தமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

 

 

 

ஜேர்மனி: பல தசாப்தங்களாக நீடித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைகளை மாற்றும் இம்முடிவோடு, சார்செலர் அங்கெலா மேர்க்கெல் ஒத்துப் போகவில்லை எனத் தெரிவித்த அவரது பேச்சாளர், இரு தேசங்கள் என்ற தீர்வை வலியுறுத்தினார்.

 

 

 

 

சவூதி அரேபியா: இம்முடிவை “நியாயமற்றதும் பொறுப்பற்றதும்” என வர்ணித்த சவூதி அரேபியா, பலஸ்தீனமக்களின் வரலாற்று ரீதியானதும் நிரந்தரமானதுமான உரிமைகளுக்கு எதிராக, இது அமைந்துள்ளது எனத் தெரிவித்தது.

 

 

 

 

ஈரான்: ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவைக் கண்டித்த ஈரான், இஸ்‌ரேலுக்கெதிரான எழுச்சியென்றுக்கு அச்சுறுத்தல் விடுத்தது. “ஆத்திரமூட்டுவதும் விவேகற்றதுமான முடிவு” என, ஈரான் மேலும் குறிப்பிட்டது.

 

 

 

 

சிரியா: இத்தீர்மானம், பலஸ்தீனத்துக்கான போராட்டத்தை மழுங்கடிக்காது எனத் தெரிவித்த சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், ஜெருசலேத்தின் எதிர்காலத்தை, நாடொன்றோ அல்லது ஜனாதிபதியோ தீர்மானிக்க முடியாது எனவும், வரலாறே தீர்மானிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

 

 

 

 

இவர்களைத் தவிர ஜோர்டான், லெபனான், துருக்கி உள்ளிட்ட நாடுகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.