சிநேகிதியே..சிநேகிதியே..: “‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்’ என்று அஜீத் ஷாலினியிடம் சொன்ன போது..!! ஒரு இனிமையான காதல் கதை

· · 1128 Views

மிழ் திரையுலகின் எக்ஸ்ட்ரா க்யூட் காதல் தம்பதி, அஜீத், ஷாலினி. அவர்களுக்கு ஒருவர் மேல் ஒருவர் காதல் தோன்றிய தருணம் எது என்று தெரியுமா?! இதோ அந்த  ஃப்ளேஷ் பேக்!

297642_14295

இன்று இரண்டு குழந்தைகளின் ஃபுல்டைம் மாம் ஆன ஷாலினி, அன்று புதுமணப் பெண்ணாக தன் ‘காதல் மன்னன்’ பற்றிச் சொன்னது:

‘முதன் முதலா ‘அமர்க்களம்’ படப்பிடிப்பில்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். ஒரு காட்சியில், ‘ஏய்!’ என்ற அலறலோடு அஜீத் கத்தியை காற்றில் வீச, எதிரே இருந்த என் கையில் ரத்தக்கோடு. ‘கட்! கட்!’ என மொத்த யூனிட்டும் பதறிப்போனது. அஜீத் செய்த ஆர்ப்பாட்டத்தில், சில நிமிடங்களில் ஒரு ஆஸ்பத்திரியே யூனிட்டுக்கு வந்துவிட்டது. ‘ஒருத்தருக்கு ஒண்ணுன்னா இவ்ளோ துடிச்சிப் போறாரே’ என்று, அவர் மீது எனக்குப் ப்ரியம் பிறந்தது அந்தத் தருணம்தான்.

‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்‘ என்று அஜீத் என்னிடம் சொன்னபோது, பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை. ஏனெனில், என் மனமும் அப்போது அஜீத் பக்கம் சாயத் தொடங்கியிருந்தது. ஆனால், நான் அப்பா  பொண்ணு. அதனால், ‘எனக்கு ஓ.கே. அப்பாவிடம் பேசிவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அப்பாவிடம் அஜீத் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்.

அஜீத், ஷாலினி

திருமணத்துக்கு முன்பு அஜீத் ரயில் இன்ஜின் போல் சிகரெட் பிடிப்பார். ‘அது எனக்குப் பிடிக்கலை’ என்று நான் சொன்னவுடன், சிகரெட்டை விட்டுவிட்டார். ‘என்னுடைய முதல் காதலி பைக்தான்’ என்று அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார். ஒரு முறை சோழவரம் பைக் பந்தயத்தில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட விபத்தில், முதுகுத் தண்டில் அடிபட்டு அவர் பட்ட கஷ்டத்தைப் பார்த்தபோது, துடித்துப்போய்விட்டேன். எதிரிக்குக்கூட அந்த நிலைமை வரக்கூடாது.

மனிதனின் உழைப்பு மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வேர் போன்றது. அது வெளியே தெரியாது.ஆனால் வேர்தானே மரம் நிலைத்து  நிற்க ஆதாரமாக உள்ளது? அந்த உழைப்பின் மீது எப்போதும் அஜீத்துக்கு நம்பிக்கை உண்டு. ‘பின்னணி’ என்ற ஊன்றுகோல் இல்லாமல் உழைப்பால் முன்னுக்கு வந்த நடிகர்களில் அவரும் ஒருவர்.

போனில் பேசி முடிக்கும்போது ஒவ்வொரு முறையும் தவறாமல் ‘ஐ லவ் யூ’ சொல்லும் காதல் மன்னன் அவர். பொது இடங்களில் நாங்கள் இருவரும் கைகோத்து  நடப்பதை விரும்புவார். சமையலில் நான் சுமார்தான். அவர் கில்லாடி. வீட்டில் இருக்கும்போது எனக்கு விதவிதமான உணவு வகைகளை செய்து தருவார்.  மனைவியை கணவர்கள் அடிமையாகப் பார்க்காமல் நல்ல தோழியாகப் பார்த்தால்… தாம்பத்யத்தில் விரிசல் வராது!”

அஜீத், ஷாலினி

மனதாலும் ‘மிஸ்டர் ஹேண்ட்ஸம்’, அஜீத். அவர் தன் மனதை கொள்ளையடித்த ஷாலினி பற்றிச் சொன்னது:

‘சினிமாத்துறை பற்றி இருவருக்குமே நன்றாகத் தெரியும். ஒருவரையொருவர் சந்தேகப்பட மாட்டோம். சந்தேகம் வந்து விட்டாலே சந்தோஷம் வெளியே போய்விடும்.

‘அமர்க்களம்’ படப்பிடிப்பின்போது கத்தி எதிர்பாராத விதமாக ஷாலினியின் கையில் பட்டுவிட்டது. வலியால் கத்த வேண்டியர், ‘நோ ப்ராப்ளம்’ என்பது போல் அமைதியாக இருந்தார். ஷாலினியின் அந்த நிதானம், என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டது. அவர் மேல் சக நடிகை என்ற மரியாதை தாண்டி ஓர் அன்பு அப்போது பிறந்தது. ’20 வயதில் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பக்குவமா?’ என்று பல நேரங்களில் பிரமித்துப் போயிருக்கிறேன். இதற்கு முன் நான் சந்தித்த பெண்களிடம் காணாத தீர்க்கம் ஷாலினியின் கண்களிலும், செயல்களிலும் இருப்பதை உணர்ந்தேன்.  சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்! என் தேடல் இதை நோக்கித்தான் என என் மனது சொன்னது. நேராக ஷாலியிடம் போய், ‘நான் உன்னைக்  கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்’ என்று சொன்னேன். என்ன பதில் வருமோ என்ற பதற்றம் எனக்கு. எல்லாம் சுபம்!

திருமணத்துக்குப் பிறகு என்னை கவனித்துக்கொள்வது, வீட்டை கவனிப்பது என ஒட்டுமொத்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஷாலினி. அவர் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்ட தேவதை!’

அனௌஷ்கா, ஆத்விக், அம்மா, அப்பாவின் காதல் கதை… அந்த அழகுக் குடும்பம் போலவே அழகு!

Leave a Reply

Your email address will not be published.