கிழக்கின் துயரம் “மரியம் பீபீ” : பெருந்தலைவர் கனவு கண்ட கிழக்குப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமை !! முஸ்லிம் காங்கிரஸ் இவரை எட்டி உதைக்கிறது

· · 670 Views

அவ்வப்போது வழமையாக எனது வீட்டுக்கு தனது பார்வையற்ற மகனது கண்களுக்கான வைத்த்தியத்துக்காக பொருளாதார உதவி கோரி வருகின்ற அந்த வயது முதிர்ந்த பெண் என்னை சந்திக்க இன்று காலை (2018-04-12) வந்திருந்தார்.

 

 

புது நகர், பைசல் நகரைச் சேர்நத வறுமைக்குப் பிறந்த பெண். பெயர் முகம்மது இஸ்மாயீல் மரியம் பிள்ளை……….அல்லது மரியம் பீபீ………..வயது அறுபதிருக்கும். கணவரில்லாமலே காலம் தள்ளுகின்ற துரதிஷ்டம். அவரது முப்பத்தொன்பது வயது நிரம்பிய மகன் தனது இரு விழிகளின் பார்வையையும் தொலைத்து விட்டு இருட்டின் பிரபஞ்ச வெளியில் அந்த வயது முதிர்ந்த தாயின் பராமரிப்பிலேயே இன்று வரை இருந்து வருகின்றான். ஏழ்மை அவர்களை பகிரங்க ஏலத்தில் எடுத்திருக்கின்றது.

 

 

 

 

மிகவும் நேர்மையான பெண்மணி. தனது மகனின் கண்களுக்கு மருந்து வாங்க வேண்டுமென்று உதவி கேட்டு வந்தால் அந்த மருந்தின் விலையை விட ஒரு சதம் மேலதிகமாக வாங்க மாட்டார். வரும் போது மருந்துச் சிட்டையையும் கொணடு வருவார். அந்த வயது முதிர்நத தாயாரின் சிறு வியாபராரத்திலேயே பசிக்கெதிரான அவர்களது அன்றாடப் போராட்டம் சென்று கொண்டிருக்கின்றது.

 

 

 

மேற் பராவில் இந்தளவு தூரம் வறுமைக்கு வாக்கப்பட்டு ஏழ்மையின் கூரிய நகங்களால் பலத்த காயங்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்ற அந்த வயது முதிர்நத தாயை நான் குறிப்புகள் தர காரணமிருக்கின்றது……இதே தாய்…..தள்ளாத வயதிலும் தனது பார்வையற்ற மகனையும் குடும்பத்தையும் சுமந்து கொண்டிருக்கின்ற வறுமைக்காரி அண்மையில் அதிகாரத்தின் உச்சக்கட்ட துஷ்பிரயோகத்துக்கும், அதிகாரத்தின் மதம் பிடித்த வெறிக்கும் இரையாக்கப்பட்டிருக்கின்றார். அந்தத் தாயின் விடயத்தில் மிகப் பெரும் அநியாத்தை அரங்ககேற்றியிருக்கின்றார் கிண்ணியா பிரதேச செயலாளரான அனஸ் அவர்கள். பிரதேச செயலாளரின் பணிப்பின் பேரில் கிராம உத்தியோகத்தர்களால் விரட்டியடிக்கப்ட்டிருக்கின்றார்.

 

 

 

 

கடந்த 2018-03-18ம் திகதியென்று நினைக்கின்றேன். அன்றைய நாளில்தான் கட்டார் நாட்டின் பூரண அனுசரணையோடு மகமாறு நடுவூற்று கிராம எல்லைகளில் அமைந்துள்ள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருபத்தியிரண்டு வீடுகள் இருபத்தியிரண்டு பயனாளிகளுக்கு அலுவலக ரீதியாக வழங்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த வீடளிப்பு விழாவில் பல அரச உத்தியோக்ததர்களும் அரசியல் அரிதாரங்களும் மாலையும் கழுத்துமாக அலைந்து திரிந்ததனை யாவரும் அறிவீர்.

 

 

 

 

இந்த இருப்திரண்டு வீடுகளில் இரபத்தியரண்டாவது இலக்கமிட்ட வீட்டின் திறப்பு நான் மேலே சொன்ன அந்த வயது முதிர்நத தாய்க்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அலுவலக ரீதியாக ஒப்படைக்கப்பட முன்னரேயே கடந்த 2017-12-05 ம் திகதி கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கிண்ணியா பிரதேச செயலாளரினால் இருபத்தியிரண்டு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கான பத்திரங்களும் மற்றும் வீட்டுத் திறப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. தனது இருபத்தியிரண்டாம் இலக்க வீட்டுக்கான பத்திரத்தினையும் திறப்பினையும் பெற்றிந்த அந்தத் தாய் அன்றைய தினமே தனது வீட்டில் குடியேறி இருக்கின்றார். தனக்கு வழங்கப்பட்ட வீட்டுக்கு ஆயிரத்தெட்டு பொருளாதார நெருக்குவாரங்களுக்குள்ளே மினசார வசிதியையும் எடுத்துள்ளார். அதே நேரம் நிரந்தரமாக வசிக்கின்ற எண்ணத்தோடு அந்த வீட்டில் தனது எல்லா வீட்டுப் பொருட்களையும் கொண்டு போய் வைத்திருக்கின்றார். தவிரவும், அந்த வீடமைந்துள்ள காணியை சுத்தப்படுத்தி அதனை பராமரிக்க நிறைய செலவும் செய்திருக்கின்றார்.

 

 

 

அந்த வயோதிக வறுமைக்காரப் பெண் தனது கைகளை என்னிடம் காட்டினார்…அந்த இரு கைகளும் காய்த்து தோல் மரத்துப் போயிருந்தது. “வம்பெட்டி பிடிச்சி தெனம் தெனம் அந்த வளவ துப்புரவாக்கினதால கை ரெண்டும் இப்படியாயிற்று தம்பி” என்று சொல்லி அழுதார். அந்தக் கண்ணீரில் வடிந்தது துளிகளல்ல துயரம்.

 

 

 

உண்மையில் இந்தப் பெண்ணும் இந்த வீட்டைப் பெற பயனாளியாக தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம் கடந்த 1990ம் ஆண்டுகளில் அவர் மயிலப்பஞ்சேனையில் வாழந்து வந்திருக்கின்றார். அந்த நேரத்தில் வீதியபிவிருத்திக்காக அவர் குடியிருந்த காணி அரசால் சுவீகாரம் செய்ப்பட்டிருக்கின்றது. சுவீகாரம் செய்யப்பட்ட காணிக்கான பதில் வீடாக இது வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

 

இவ்வாறு கடந்த நான்கு மாதங்களாக அந்த வீட்டில் வசித்து வந்து கொண்டிருக்கின்ற போது அலுவலக ரீதியாக வீடளிக்கின்ற வைபவம் நடக்க ஏற்பாடாகியிருந்த 2018-03-18ம் திகதிக்கு ஒரு நாள் முன்னர் திடீரென்று அந்த பெண்ணின் வீட்டுக்கு விசிட் அடித்த கிண்ணியா பிரதேச செயலாளர் காரணமேதுமின்றி அந்தப் பெண்ணை “உடனடியாக இந்த விட்டை விட்டு நீங்கள் வெளியேறி திறப்பை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்……..உமக்கு இந்த வீட்டில் இருக்க உரிமையில்லை….வெளியேறா விட்டால் மோசமான பின் விளைவகளை சந்திக்க வேண்டி வரும்” என்று ப்ளக் மெயில் பண்ணியிருக்கின்றார்.

 

 

 

விளிம்பு நிலை மாந்தர்களுல் ஒருவரான இந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. நிறைய ஷொக்கிங். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என அவருக்குப் புரியவில்லை. ஏன் தன்னை தனக்குரிய வீட்டிலிருந்து பிரதேச செயலாளர் வெளியேறச் சொல்லுகின்றார் என கடைசி வரைக்கும் அவருக்கு கன்ஃபியூஸ். ஆனாலும் அவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறாமல் அங்கேயே இருந்தார். அதற்கடுத்த நாள் நடந்த விழாவில் அவருக்கு இருபத்தியிரண்டாம் இலக்க வீடு வழங்கப்பட்டது.

 

 

 

வீடு வழங்கும் விழா நடந்து முடிந்த பின்னர் மீண்டும் கிண்ணியா பிரதேச செயலாளர் இந்தப் பெண்ணிடம் உனடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தியிருக்கின்றார். அவரது வீட்டுக்குப் போய் “நீ இன்னும் வீட்டை விட்டு வெளியேறவில்லயா” என்று கூறி கோபத்தோடு ரகளை பண்ணியிருக்கின்றார். அவரது பணிப்பின் பேரில் பல தடவை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி மஜீது என்கின்ற கிராம உத்தியோகத்தர் அவரது வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தியிருக்கின்றார். இவர் விட்டை விட்டு எழும்பாததன்’ காரணமாக பொலிசார் கூட அங்கு வந்திருக்கின்றார்கள்.

 

 

 

 

இந்தப் பெண்மணியும் பொலிசுக்கென்று இயலாத வயதிலும் அலைந்திருக்கின்றார். இறுதியாக கச்சேரி சென்று மாவட்ட செயலாளரை சந்தித்து கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தருக்கதெிராக முறைப்பாடு செய்திருக்கின்றார். மாவட்ட செயலாளர் கிண்ணியா பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாகப் பேசி விட்டு அந்தப் பெண்ணிடம் அந்த வீட்டில் போய் குடியிருக்குமாறு கூறியிருக்கின்றார். அதன் படி அவரும் அந்த வீட்டில் குடியிருக்க அதன் பின்னரும் பிரச்சினைகளும் அச்சுறுத்தல்களும் அவரை துரத்தியடித்துக் கொண்டிருந்தன.

 

 

 

கடந்த 2018-04-04ம் திகதி மீண்டும் கிராம உத்தியோகத்தர் அந்த 22ம் இலக்க வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணை அச்சுறுத்தி அவரை அங்கிருந்து சட்ட விரோதமாக வெளியேற்றி அந்த வீட்டின் திறப்பை தனது உடைமையில் எடுத்து அந்தப் பெண்ணை அங்கிருந்து வெளியேற்றியிருக்கின்றார். ஏனிப்படி பண்ணுகின்றீர்கள் என்று கேட்டதற்கு “இது பிரதேச செயலாளர் கட்டளை” என்றிருக்கின்றார்.

 

 

 

இன்று பிரதேச செயலாளரின் ஸ்பொன்சர்ஷிப்பிலும் அவரது பூரண ஆசிர்வாதத்தோடும் அந்த வீட்டில் இன்னொருவர் குடியிருக்கின்றார். இப்போது தனக்கென்றிருந்த அந்த ஒரு வீட்டையும் அரச அடக்குமறையால் அதிகார வெறியால் அதிகார துஷ்பிரயோகத்தால் இழந்து அநாதரவற்ற நிலையில் அலைக்கழிந்து கொண்டிருக்கின்றார் அந்த தள்ளாள வயதுத்தாய்.

 

 

 

தனக்கு நடந்த கொடுமை பற்றி அநியாயம் பற்றி மாண்புமிகு தௌபீக் மக்கள் பிரதிநிதியிடம் அந்தத்தாய் முறையிட்டிருக்கின்றார். ஆனால் அவர் ஏதோ ஒரு சால்ஜாப்பு செய்து சமாளிப்புக்கேசன் நடாத்தி அந்த அநியாயம் இழைக்கப்பட்ட தாயை அலேக்காக வழி அனுப்பி வைத்திருக்கின்றார். பாவப்பட்ட பிறவி. அரசியல் உன்மத்தத்தின் கசாப்புக் கடை ஆடுகளில் ஒருத்தி. அவ்வளவுதான்.

 

 

 

மாபெரும் அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு ஏழைத்தாயின் அநியாயத்துக்கெதிராக இங்கே போராட்டம் நடாத்த யாருமே இல்லாமற் போய் விட்டார்கள். அந்த ஏழையின் கண்ணீரைத் துடைக்க யாரிடமும் கைக்குட்டை என்ன விரல்களே இல்லாமற் கூடப் போய் விட்டது. அதிகார மமதையின் பெருத்த குரலில் அகப்பட்டு நசுங்கிப் போன ஏழையின் காதுகளுக்கு மருத்துவம் பாரக்க யாருமே முன் வரமாட்டார்கள். நமக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. பம்மாத்து அரசியல் பேசுவதிலும், பக்கா ஜால்ரா அடிப்பதிலும், அரசியல் அல்லக்கைகளின் பட்டாப்பட்டி அன்டர் வெயர்களை அத்தர் ஊற்றி கழுவுவதிலுமே காலத்தை நாஸ்தி பண்ணிக் கொண்டிருக்கின்ற இன்றைய பெரும்பாலான அன்ட்ராய்டுகளுக்கு இது பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. அதிலும் குறிப்பாக அதிகாரத்திலிருக்கின்ற பிரதேச செயலாளர் போன்றவர்களை எதிர்த்துப் பேச இங்கே யாருக்கும் திராணி கிடையாது. இதில் நிறையப் பேருக்கு சொந்த லாபப் பிரச்சினை இருக்கின்றது.

 

 

 

மாண்புமிகு கிண்ணியா பிரதேச செயலாளர் அவர்களே நீங்கள் இந்தப் பெண்ணின் விடயத்தில் சட்ட விரோதாக நடந்து கொண்டிருக்கின்றீர்கள். வழங்கப்பட்ட வீட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அநியாயம் இழைக்கப்பட்ட பெண்ணுக்குரிய வீட்டை திரும்பவும் கொடுத்து விடுங்கள். நீங்கள் நினைத்தது போல அதிகாரத்தை உங்கள் கையிலெடுத்துக் கொண்டு விளிம்பு நிலை மக்களை உருச்சிதைக்க முடியாது. குறிப்பிட்ட பெண்ணுக்குச் சொந்தமான அந்த வீட்டை நீங்கள் மீளவும் ஒப்படைக்காத பட்சத்தில் சட்டத்தின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதனை சொல்லுவதில் எனக்கு எந்த விதமான வறுத்தமும் கிடையாது.

 

 

 

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க நாங்கள் இருக்கின்றோம்.

(இந்தப் பதிவு முழுக்க முழுக்க பாதிக்கப்பட்ட பெண்ணினால் சொல்லப்பட்ட கதையின் சாராம்சம் மட்டுமே….தனிப்பட்ட இடைச்செறுகல் எதுவும் கிடையாது….அந்தப் பெண் சொன்ன கதையின் அரைவாசிப் பகுதியை எடிட் பண்ணி விட்டே மீதியை எழுதியிருக்கின்றேன்)

கிண்ணியா சபருள்ளாஹ்

Leave a Reply

Your email address will not be published.