கல்பிட்டியின் தலைவர் தெரிவு ரகசியமாகவும், உப தலைவர் தெரிவு வெளிப்படையாகவும் இடம் பெற்றது – பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆசிக் போட்டியில் இல்லை

· · 757 Views

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தில் 11 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற கற்பிட்டி பிரதேச சபையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்  ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கற்பிட்டி பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.இன்பாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையைச் சேர்ந்த கே.எஸ்.விஜித்த பெர்ணான்டோ உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த உறுப்பினர் ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜே.எம்ஆர்.பி.ஜெயசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை காலை 8.30 க்கு கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவுக்கான அமர்வு பிரதேச சபை பிரதான கட்டடத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முதலில் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு தொடர்பாக உள்ளூராட்சி ஆணையாளரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், சபையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாமையினால் வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தலைவர், உபதலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் சபையில் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஏ.எம்.இன்பாஸூம், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.கே.சலாஹூதீனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கே.எஸ். விஜித்த பெர்னான்டோவும் சபையின் தலைவர் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கே.எஸ். விஜித்த பெர்னான்டோ தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக சபையில் அறிவித்தார்.

இதனையடுத்து, சபையில் முன்மொழியப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஏ.எம்.இன்பாஸூம், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஏ.கே.சலாஹூதீனும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இதன்போது உறுப்பினர்களின் விருப்பத்துடன் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.இன்பாஸூக்கு 19 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.சலாஹூதீனுக்கு 12 வாக்குகளும் கிடைத்தது.

இதன்படி, 7 மேலதிக வாக்குகளால் கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக ஏ.எம்.இன்பாஸ் செய்யப்பட்டுள்ளார் என வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜே.எம்ஆர்.பி.ஜெயசிங்க உத்தியோகபூர்வமாக சபையில் அறிவித்தார்.

இதனையடுத்து, கற்பிட்டி பிரதேச சபையின் உப தலைவருக்கான தேர்வு இடம்பெற்றது.

இதன்போது, உப தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கே.எஸ்.விஜித்த பெர்னான்டோவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காமினி ரொட்ரிகோவும் சபையில் பிரேகரிக்கப்பட்டனர்.

உப தலைவர் தெரிவு சபை உறுப்பினர்களின் பூரண விருப்பத்துடன் திறந்த வாக்கெடுப்பாக நடத்தப்பட்டது.

இதன்போது, உப தலைவர் தெரிவுக்காக பிரேகரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கே.எஸ்.விஜித்த பெர்னான்டோவுக்கு முதலாம் இலக்கமும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காமினி ரொட்ரிகோவுக்கு இரண்டாம் இலக்கமும் வழங்கப்பட்டது.

இந்த திறந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.விஜித்த பெர்னான்டோவுக்கு சார்பாகவே கை உயர்த்தி தங்களது வாக்குகளை அளித்தனர்.

அத்துடன், சுயேட்சை குழுவில் தெரிவான உறுப்பினர் ஒருவர் திறந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகிப்பதாக சபையில் அறிவித்தார்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.விஜித்த பெர்னான்டோவுக்கு 18 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட காமினி ரொட்ரிகோவுக்கு 12 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி, 6 மேலதிக வாக்குகளினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான கே.எஸ்.விஜித்த பெர்னான்டோ கற்பிட்டி பிரதேச சபையின் உப தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி. பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் நியமிப்பதற்கான சபை அமர்வு நடைபெற்ற கற்பிட்டி பிரதேச சபை பிரதான கட்டட வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அடையாள அட்டைகளை வைத்திருந்த ஊடகவியலாளர்களும், அரச அதிகாரிகளும், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுமே சபைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கற்பிட்டி சபையின் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.இன்பாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளமையை அடுத்து பிரதேச சபைக்கு முன்பாக ௯டிநின்ற கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தியதுடன், வாகன பேரணியில் ஊர்வளமாகவும் சென்றனர்.

By : lankareuters.com

Leave a Reply

Your email address will not be published.