கல்பிட்டிக்கு கொண்டு சென்ற கஞ்சாவை புத்தளம் பொலீசார் கைப்பற்றினர் !! வரலாற்றில் ஒரு ஏடு

· · 850 Views

முல்லைத்தீவிலிருந்து கற்பிட்டியை நோக்கி நேற்று சனிக்கிழமை சென்றுகொணடிருந்த இ.போ.ச. பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவரிடமிருந்து ஐந்து கிலோ கிராம் கேரளக் கஞ்சா பொதிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் எனவும் அவர் முல்லைத்தீவு  ஹிஜ்ராபுரத்தில் தற்காலிகமாகவும், புத்தளம் கரம்பை ஸபா – மர்வா கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவிலிருந்து புத்தளம் கற்பிட்டியை நோக்கி பயணித்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணம் செய்யும் பயணி ஒருவரினால் கஞ்சாப் பொதிகள் கொண்டு செல்லப்படுவதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றில் அடிப்படையில் குறித்த பஸ் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்ட போதே சந்தேக நபர் கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் பி.கே.சுமித் ரோஹன தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் அமரசிங்க (41495), பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது ஹைருடீன் (24055), பொலிஸ் சார்ஜன்ட் பத்மஸ்ரீ (41157), பொலிஸ் கொஸ்தாபல் திசாநாயக்க (4142), பொலிஸ் கொஸ்தாபல் சாரதி திசாநாயக்க (80953) ஆகிய குழுவினரே குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
நேற்று சனிக்கிழமை காலை முல்லைத்தீவில் இருந்து புத்தளம் கற்பிட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான குறித்த பஸ் பகல் 1 மணியவில் புத்தளம் அநுராதபுர வீதியில் வைத்து பொலிஸ் குழுவினரால் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக சோதனை நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த பஸ் கொண்டு செல்லப்பட்டன.
இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த பஸ்ஸில் பயணித்த அனைத்து பயணிகளும், அவர்கள் கொண்டு சென்ற பயணப்பொதிகளும் பொலிஸ் நிலையத்தில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த ஒருவர் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட ஐந்து கிலோ கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த கஞ்சாப் பொதிகளை மிகவும் சூட்சகமான முறையில் பொதி செய்யப்பட்டு, பாடசாலை பை ஒன்றில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், சந்தேக நபர் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் கரம்பையிலுள்ள தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த சந்தேக நபரே கஞ்சாப் பொதிகளை தனது கையில் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துளள்தாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, இ.போ.சபையின் முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பஸ் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பஸ்ஸில் பயணித்த அனைத்து பயணிகளும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேனவின் வழிகாட்டலில், புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தனவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

– முஹம்மட் ரிபாக்

Leave a Reply

Your email address will not be published.