“கத்தியின்றி..ரத்தமின்றி..முஸ்லிம்களுக்கு எதிரான போரில் நல்லாட்சி அரசாங்கம் !!!

· · 1397 Views

ஜெம்சித் (ஏ) றகுமான்


இந்த நாட்டிலே கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இனரீதியான அட்டூளியங்களையும்,அராஜக போக்குகளையும்,இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மைத்திரிப்பால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்ட அரசாங்கத்தை உருவாக்க பாரிய பங்களிப்பை செய்திருந்தோம்.

sri_lanka_attack_reuters_295x200

முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிலர் காவி உடை அணிந்தும்,சிலர் காவி உடை அணியாமலும் பெரும்பான்மை சமூகத்தலைவர்கள் என தம்மை அடயாளப்படுத்தி இனவாதத்தை தூண்டும் செயல்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,சுபீட்சமாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடும் எங்களது அதிக பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட யகபாலனய என்ற நல்லாட்சி உருவாக்கப்பட்நோக்கத்தில் இருந்து விலகி வேறு வழியில் சென்று கொண்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன எடுத்தார் கைபிள்ளை என சூளுரைத்ததை வில்பத்து விடயத்திலே மைத்திரிபால நிரூபனமாக்கி இருக்கிறார்.

கடந்த ஆட்சிக்காலத்திலே மகிந்த ராஜபக்ஷவை இனவாதியாக,மதவாதியாக சித்தரித்து முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகபடியான வாக்குகளை பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் பாதை, மாற்றம் அடைந்து செல்கிறது.இனவாதத்தை இல்லாமல்செய்வோம் என வீரவசனங்களை முழங்கியவர்கள் வடக்கிலே முஸ்லிம்களின் பாரம்பரிய இடமான வில்பத்தை ஜீவராசிகளின் பகுதியாக பிரகடனம் செய்ய முன்வந்திருப்பது உண்ட இடத்திற்கே குழி தோண்டும் கதையாக மாறி உள்ளது.

அலுத்கமையில் கேட்ட அழுகுரல்களுக்கு விடை கிடைக்கும் என நல்லாட்சியின் பங்காளர்களாகினோம்.ஆனால் இன்று அமைதியாக அதனை விட கொடிய இனவாத விஷத்தை கக்கி வில்பத்து பிரகடனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இது அப்பனை விட சுப்பனேமேல் என முஸ்லிம்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுபலசேனா,ராவணபலய போன்ற இனவாத அமைப்புகளை மகிந்த ராஜபக்ச உரம் ஊட்டி வளர்க்கிறார் என போலிப் பிரச்சாரங்களை கூறிவிட்டு இன்று அவர்களின் கைபொம்மைகளாக மாறி இருக்கிறது யகபாலனய என்ற நல்லாட்சி.அதற்கு சிறந்த எடுத்துக்காட்டே வில்பத்து ஜீவராசி பிரகடனம்.

காவி உடை அணிந்திருப்பவர்கள் இனவாதத்தை தூண்டுவதை விடவும் மேலாக இந்த நல்லாட்சியிலே முக்கியமான சில அமைச்சுப்பதவிகளை வகிப்பவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வரும் இவர்கள் தான் வில்பத்து விடயத்திலே பாரிய பங்கை வகிக்கிறார்கள்.பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் ராஜித,சம்பிக்க ரணவக்க போன்ற விஷக் கிருமிகளே அவர்கள்.

இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் இரவோடு இரவாக உடுத்த ஆடைகளுடன் விடுதலைப்புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்ட கொடிய சம்பவத்தை நாங்கள் மறக்கவில்லை.சொந்த இடங்ளை விட்டு விட்டு திக்குத் தெரியாமல் அலைந்து திரிந்து, அகதிகள் எனும் பெயரைத் தாங்கி நிற்கும் வடபுல முஸ்லிம்களின் நிலை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பொற்கேணி,அகத்திமுறிப்பு,கரடிக்குழி,மறிச்சுக்கட்டி,பண்டாரவெளி,வேப்பங்குளம்,மேத்தன்வெளி,முசலி,சிலாவத்துறை போன்றன முஸ்லிம்களின் வரலாற்றை கொண்ட பாரம்பரிய பிரதேசங்களாகும்.இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் விவசாயத்தை ஜீவனோபாய தொழிலாக கொண்டிருந்தனர்.இந்த வரலாறுகளை நீங்கள் அறிந்திருந்த போதும் கண்மூடித்தனமாக இப்பிரதேசங்களை கொண்ட வில்பத்துவை வன ஜீவராசியை கொண்ட பகுதியாக பிரகடனப்படுத்த வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருப்பது எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவதை போல் உள்ளது.

இருபத்தாறு வருடத்திற்கு முன்னர் உடுத்த ஆடைகளோடு விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை துரத்தி விட்டதை விடவும் ஒரு படி மேலாக நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு வரலாற்று துரோகத்தை செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

1990 ம் ஆண்டு வடபுல முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் ஒழித்து கட்ட வேண்டும் என நினைத்தை இன்று வில்பத்து விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருக்கிறது.அன்று அவர்கள் அடாவடியாக வெளியேற்றினார்கள் இன்று இவர்கள் நல்லாட்சி எனும் பெயரிலே அமைதியாக வெளியேற்ற நினைக்கிறார்கள்.

புதிய காணி,நிலம் வேண்டும் என கேட்கவில்லை.முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களையே கேட்கிறார்கள். அகதி வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து அவர்களின் இடங்களில் குடியேறி நிம்மதியாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.அதை விடுத்து பூர்வீக இடங்களை தட்டி பறிக்க நினைப்பது நியாயமற்ற செயல்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கபட்டிருக்கும் இந்த அறிவித்தலுக்கு எதிராக குரல் எழுப்ப எல்லோரும் முன்வர வேண்டும்.நமது சமூகம் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும்.எமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து எம் உறவுகளான வடபுல முஸ்லிம்களின் பூர்வீக இடத்தை மீட்டி கொடுக்க ஒரு குடையின் கீழ் ஒன்றிணைவோம்.

Leave a Reply

Your email address will not be published.