எஸ்.டீ.எப். பாதுகாப்பு வேண்டும் !! ஹக்கீம் கோரிக்கை – தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்கிறார்

· · 450 Views
ஜனநாயக மக்கள் முன்னணயின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டமையினை அடுத்து, அதுபோன்ற பாதுகாப்பினை  தமக்கும் வழங்குமாறு மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
அதேவேளை, அமைச்சர் பி. திகாம்பரமும் இவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் மனோகணேசனுக்கு மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்ற, அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, மனோ கணேசனின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், மேற்படி நடவடிக்கையினை ஜனாதிபதி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில், கொழும்பு மாவட்ட வேட்பாளர் பங்கீடு தொடர்பில் ஏற்பட்ட பிணக்கிணை அடுத்து, அமைச்சர் மனோவின் ஆதரவினைப் பெறுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
அமைச்சர் மனோ கணேசனுக்கு, பாதாள உலகக் கோஷ்டியினரின், அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, தமக்கும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்குமாறு ரஊப் ஹக்கீம் மற்றும் திகாம்பரம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளதோடு, மனோவுக்கு உள்ள அதே வகையான பாதுகாப்பு அச்சுறுத்தல் தமக்கும் உள்ளதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அரசாங்கத்துடன் இருக்கின்ற சிறுபான்மை கட்சித் தலைவர்களில் ஒருவருக்கு மட்டும், விசேட வரப்பிரசாதங்களை அரசாங்கம் வழங்கக் கூடாது எனவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, உள்ளுராட்சித் தேர்தல் முடியும் வரை, மேற்படி இருவருக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்குவதற்கு, அரசாங்கம் யோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.